உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 20 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் காணாத மாவூற்று வேலப்பர் கோயில்!

20 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் காணாத மாவூற்று வேலப்பர் கோயில்!

ஆண்டிபட்டி:மாவூற்று வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு, இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் நீர் சுனையாக மாறி உள்ளது.கோடையிலும் , இந்த சுனையில் வற்றாத நீர் சுரந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் சுனையில் நீராடி, முருகனை வழிபடுவதால் தீராத நோய்கள், மனக்கவலைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் தேதியில் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் வந்து வேலப்பரை வழிபட்டு செல்வர். மாதாந்திர கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் செய்வர்.நேர்த்திக்கடனாக காவல் தெய்வம் கருப்பசாமிக்கு ஆட்டுக்கிடா வெட்டி அன்னதானம் வழங்குவர். இவ்வளவு சிறப்பு கொண்ட கோயில் இந்து அறநிலையத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், பல ஆண்டுளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. இது குறித்து, சமூக ஆர்வலர் கம்பட்டி முத்துவன்னியன் கூறியதாவது: கோயில் கோபுரத்திற்கும், கர்ப்பக்கிரகத்திற்கும் 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம்.வேலப்பர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 20 ஆண்டுக்கும் மேலாகிறது. மராமத்து பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது தொடர்பாக பக்தர்கள், இந்து அறநிலையத்துறையை வலியுறுத்தி வருகின்றனர்,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !