உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அச்சன்கோயில் ஆபரணப்பெட்டிக்கு 15ம் தேதி தென்காசியில் சிறப்பு வரவேற்பு

அச்சன்கோயில் ஆபரணப்பெட்டிக்கு 15ம் தேதி தென்காசியில் சிறப்பு வரவேற்பு

தென்காசி: அச்சன்கோயில் ஆபரணப்பெட்டி வரும் 15ம் தேதி தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன் வருகிறது. அன்று ஐயப்ப பக்தர்களும், பொதுமக்களும் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து முறையான விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருவது வழக்கம். அவ்வாறு அவர்கள் விரதம் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நடவடிக்கையும், ஐதீகமான முறையில் இருப்பதை பொறுத்து தான் ஐயப்பன் ஆசி வழங்குவார் என்பது ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கை. ஆண்டுதோறும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்களின் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இவ்வாறு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தென் தமிழகத்தில் இருந்து செல்லும் பெரும்பாலான பக்தர்கள் தென்காசி, செங்கோட்டை, தென்மலை, அச்சன்கோயில் வழியையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். அச்சன்கோயிலில் உள்ள ஐயப்பன் கோயிலை சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் தரிசித்து செல்வது வழக்கம். இந்த அச்சன்கோயில் ஐயப்பனுக்கு சொந்தமாக பல கோடி ரூபாய்மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய நகைகள் உள்ளன. இவை புனலூர் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். ஆண்டு தோறும் நடக்கும் உற்சவ திருவிழாவின் போது ஐயப்பனுக்கு அணிவிப்பது வழக்கம். இந்த ஆண்டு நடக்கும் உற்சவ திருவிழாவை முன்னிட்டு தலை, முகம், மார்பு, கை, கால் அங்க கவசம் அடங்கிய ஆபரண பெட்டி மூலம் புனலூரில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது. புளியரை, செங்கோட்டை, வழியாக தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் முன் வருகிறது. ஐயப்பனின் முழு உருவ அங்க கவசங்கள் தனித்தனியாக ஒரே பெட்டியில் முழுவதும் வருவது ஐயப்பனே வந்து ஆசிர்வதிப்பதாக நம்பப்படுகிறது. தென்காசிக்கு வரும் ஆபரணப்பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு கமிட்டி தலைவர் குருசாமி, செயலாளர் மாடசாமி ஜோதிடர், பொருளாளர் தங்கவேல், துணை செயலாளர்கள் மணி, ஐயப்ப சேவா சங்க தலைவர் மாரிமுத்து, கவுரவ தலைவர் ராமன், செயலாளர் தங்கவேல், திருமலை குமாரசாமி, முருகன், அழகிரி, தமிழ்சாமி, திருநாவுக்கரசு, மற்றும் ஆபரணப்பெட்டி வரவேற்பு கமிட்டி உறுப்பினர்கள், ஐயப்ப சேவா சங்க உறுப்பினர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரவேற்பளிக்கின்றனர். வரவேற்பு முடிந்ததும் பண்பொழி வழியாக அச்சன்கோயிலுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகிறது. மறு நாள் உற்சவ திருநாள் துவங்குவதை முன்னிட்டு ஐயப்பனுக்கு திரு ஆபரணங்கள் மூலம் அலங்காரம் செய்யப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !