குண்டலீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம்
கரூர்: செட்டிபாளையம் குண்டலீஸ்வரர் கோவிலில் நடந்த மஹா கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். கரூர் அருகேயுள்ள செட்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற குண்டலீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, கடந்த, 9ம் தேதி கிராமசாந்தி நிகழ்ச்சியுடன் துவங்கியது. 10ம் தேதி வாஸ்து சாந்தி, முதல்யாக பூஜை துவக்கம், அஷ்வபந்தன பிரதிஷ்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, 11ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால பூஜை, விக்னேஷ்வர வழிபாடு மற்றும், 96 வகை மூலிகைகளில் திரவியஹோமம் நடந்தது. நேற்று அதிகாலை, நான்காவது யாகபூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து காலை, 8.19 மணிக்கு மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. பிறகு சிவக்குமார் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மற்றும் திருப்பணி கமிட்டியினர், ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர்.