முத்து மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கப்பளாங்கரை விநாயகர், முத்துமாரியம்மன் கோவில், புதுப்பிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்ததால், கும்பாபிஷேக விழா கடந்த 11ம் தேதி மாலை 5:00மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் துவங்கியது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றது. காலை 6:45 மணிக்கு கலசம் புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 7:00 மணிக்கு விமானம் கும்பாபிஷேகம், காலை 7:15மணிக்கு விநாயகர் கும்பாபிஷேகம், காலை 7:30 மணிக்கு மாரியம்மன் கும்பாபிஷேகமும் நடந்தது. கும்பாபிஷேக விழாவை காண வந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், பக்தி பரவசத்தில் ஓம் சக்தி, பராசக்தி என கோஷங்களை எழுப்பியபடி, கும்பாபிஷேக விழாவை கண்டுகளித்தனர். பின், தசதானம், தசதரிசனம், மகா அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இன்று முதல், மண்டல பூஜைகள் நடக்கிறது.