ஆலால கண்டா...! ஆடலுக்கு தகப்பா...! வணக்கமுங்க...!
நடராஜருக்குரிய ஸ்தோத்திரத்தை, ஆருத்ரா தரிசனமான இன்று சொல்லி வழிபடுவோமே! *ஆடல்கலையின் தந்தையான நடராஜரே! கூத்தப்பெருமானே! கையில் உடுக்கை ஏந்தியவரே! படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என ஐந்தொழில் செய்பவரே! காலனைக் காலால் உதைத்தவரே! பக்தர்களைக் காக்க சூலம் தரித்தவரே! கருணை மிக்கவரே! ஆலால கண்டரே! சிதம்பரம் நடராஜரே! உம்மைப் போற்றுகிறேன்.
*நெற்றியில் ஒளிவீசும் கண்ணைப் பெற்றவரே! வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகிய முனிவர்களால் வணங்கப்படுபவரே! வில்வ மாலையை விரும்பி அணிபவரே! புலித்தோல் ஆடை அணிந்தவரே! சிவகாமியை மணம் புரிந்தவரே! முயலகனை காலில் அழுத்தி நிற்பவரே! ஜடாமுடி கொண்டவரே! வெள்ளியம்பலமாகிய மதுரையில் வசிப்பவரே! உம்மைச் சரணடைகிறேன்.
*திருவாதிரை நாளில் அபிஷேகம் காண்பவரே! அழகிய உருவம் பெற்றவரே! மனக்கவலை போக்குபவரே! பிரதோஷ காலத்தில் வேண்டும் வரம் அளிப்பவரே! பிரம்மா, திருமால், நந்திகேஸ்வரர், நாரதரோடு நர்த்தனம் புரிபவரே! விபூதி, ருத்ராட்சமாலை அணிந்தவரே! மாணிக்கவாசகரால் திருவாசகப்பாடல் பெற்றவரே! மன விருப்பத்தை நிறைவேற்றுபவரே! ஞானியர் நெஞ்சில் வாழ்பவரே! திருவாலங்காட்டில் நடனமாடும் உம் திருவடியை வணங்குகிறேன்.
*வாத்தியம் இசைக்க நடனமாடுபவரே! வேதங்களை உபதேசித்தவரே! பார்வதி தேவியிடம் அன்பு கொண்டவரே! பூதங்களின் தலைவரே! பக்தர்களைக் காத்தருள்பவரே! பாவத்தைப் போக்கி புண்ணியம் அளிப்பவரே! பிறவிப்பிணியைப் போக்குபவரே! நிலையான இன்பம் அளிப்பவரே! கங்கையைத் தலையில் தாங்கியவரே! பிறை சூடிய பெருமானே! பக்தர்களின் மனவிருப்பங்களை நிறைவேற்றுபவரே! நெல்லை தாமிர சபையில் நடனமாடும் நடேசப் பெருமானே! உம் பாதமலர்களைப் போற்றுகிறேன்.
*நந்தியின் கொம்பின் நடுவில் நடனமாடுபவரே! காரைக்கால் அம்மையாருக்கு அருள்புரிந்தவரே! யாகங்களைக் காப்பவரே! கைலாயத்தில் வசிப்பவரே! நம்பியவரைக் கரை சேர்ப்பவரே! ஆபத்து காலத்தில் தக்க துணையாக வருபவரே! குற்றாலம் சித்திரசபையில் ஓவிய நடனம் புரிபவரே! எங்களுக்கு எல்லா செல்வ வளங்களையும் தந்தருள்வீராக!