புத்துணர்வு முகாமிற்கு புறப்பட்டது திருச்செந்தூர் குமரன், தெய்வானை!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயில் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பப்பட்டது.தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம்நாளை முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடக்கவுள்ளது. தேக்கப்பட்டி வனபத்திரகாளிஅம்மன் கோவில் பவானி ஆற்று வனப்படுகையில் நடக்கும் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு திருச்செந்தூர் முருகன் கோயில் யானைகளான குமரன் (வயது 11), தெய்வானை (வயது 16) ஆகியன லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக இரு யானைகளுக்கும் திருக்கோவில் சார்பல் கஜபூஜை நடத்தி பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவில் தக்கார் கோட்டைமணிகண்டன் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் கோயில் முதுநிலை கணக்கு அலுவலர் ராஜேந்திரன், கண்காணிப்பாளர் பாலசுப்பரமணியன், விடுதி மேலாளர் சிவநாதன், திருச்செந்தூர் கால்நடை மருத்துவர் சுபஸ்ரீ, அதிமுக நகர செயலாளர் மகேந்திரன், திருக்கோயில் அண்ணா தொழிற்சங்க தலைவர் மோகன்ராஜ், வழக்கறிஞர் திலீப்குமார், முன்னாள் கவுன்சிலர் காணியாளன்புதூர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.