மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் ரசாயனக் கலவை பூச்சு!
மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை பாதுகாக்க, கோவில் சுவர்களில் படிந்துள்ள, உப்பு மற்றும் மண் துகள்களை அகற்ற, ரசாயனக் கலவையை பூசும் பணி நடந்து வருகிறது. மாமல்லபுரத்தில் உள்ள, பாரம்பரிய சிற்பங்களில் கடற்கரைக் கோவில் குறிப்பிடத்தக்கது. கி.பி., 7ம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோவில் தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது.கடற்காற்றால், உப்பு மற்றும் மணல் ஆகியவை, இந்த கோவிலில் படிந்து அரித்து வருகின்றன. உப்பு அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில், சிறு சிறு துளைகள் உருவாகி உள்ளன. இதனால் கோவில், சிதிலமடையும் நிலை ஏற்பட்டது.இதை தவிர்க்க, இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதிப்புக்கேற்ப ரசாயனக் கலவை மூலம் கோவில் சுவர்களில், படியும் உப்பு, மணல் அகற்றப்பட்டு வருகிறது.பாதிப்பு அதிகரித்து வருவதால், ஆண்டுதோறும் கோவிலில் ரசாயனக் கலவை பூசி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது, கடந்த சில நாட்களாக தூய்மை செய்யும் பணி நடந்து வருகிறது.இதுகுறித்து, மாமல்லபுரம் பராமரிப்பு அலுவலர் ஜீலானி பாஷா கூறுகையில், கலைச் சின்னங்களில் படிந்துள்ள அசுத்தங்களின் தன்மைக்கேற்ப, சில ஆண்டுகளுக்கு ஒருமுறையோ, ஆண்டுதோறுமோ ரசாயனக் கலவை மூலம், அதை அகற்றி வருகிறோம். தூய்மைப்படுத்திய நீரைக் கொண்டு, காகிதக் கூழ் தயாரித்து, அதனுடன் சிலிக்கன் பாலிமர் ரசாயனக் கலவை கலந்து, கோவில் சுவர்களில் பூசப்படும். உப்புப் படிவு தன்மையை பொறுத்து, அதிகபட்சம் இரண்டு வாரங்கள் வரை, கலவை பூசி அகற்றப்படும். கலவை அகற்றிய பின்னர் நீரால் கழுவி தூய்மைப்படுத்தப்படும், என்றார்.