பழநியில் பரிதவிக்கும் பக்தர்கள்!
முருகனின் அறுபடை வீடுகளில், மூன்றாம்படையான பழநியில், ஜன., 11 ல் தைப்பூச விழா தொடங்க உள்ளது. தைப்பூச விழாவிற்கு முன்னதாக ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்த மாத இறுதி முதல் பாதயாத்திரை பக்தர்கள் வருகை துவங்கிவிடும். குவியும் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்கும் அளவிற்கு அடிப்படை வசதிகள் பழநியில் இல்லை என்பது தான் வேதனையான விஷயம். இந்த நிலை ஒவ்வொரு ஆண்டும் தொடர்வது உச்சகட்ட வேதனை. வசதிகள் இல்லாத வாகன நிறுத்தம்: சுற்றுலா பஸ், கார்களை நிறுத்த மேற்கு கிரி வீதியில் இடம் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு, 300 வாகனங்கள் வரை நிறுத்தமுடியும். ஆனால் டிரைவர்களுக்கு போதுமான கழிப்பறை வசதி, குடிநீர் வசதிகள் இங்கு இல்லை. மேற்கூரை இல்லை. டிரைவர்கள், சுற்றுலா வாகனங்களை கிரிவீதியை சுற்றியும், ரோடு ஓரங்களிலும் நிறுத்தியும் பக்தர்களுக்கு இடையூறு செய்கின்றனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதால் ஏற்படும் மறைவிடங்களில், சிறுநீர் கழிப்பதால், சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது. வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஒப்பந்த பணியாளர்கள் மூன்று பேர் மட்டுமே ஈடுபடுகின்றனர். இவர்களின் குரலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் செவிசாய்ப்பதில்லை.
சுகாதாரம் கேள்விக்குறி: நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் பேர் பழநி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். போதுமான கழிவறை, தண்ணீர் வசதி இல்லாததால் பக்தர்களின் பாடு திண்டாட்டம். பக்தர்கள் தங்குதற்கான இலவச விடுதியை கோயில் நிர்வாகம், கட்டிமுடிக்காததால், மேற்கூரை இல்லாத பஸ்ஸ்டாண்டில் கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் சமைத்து சாப்பிடுகின்றனர். மனம் உருகி சுவாமி கும்பிட வந்த எங்களை இப்படி வெயிலில் உருகவிடுவது நியாயமா என பக்தர்கள் புலம்புகின்றனர். பக்தர்கள், பாலிதீன் பைகளை ஆங்காங்கே விட்டு செல்கின்றனர். குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற, நகரில் போதிய துப்புரவு பணியாளர்கள் இல்லை. அத்தரும் ஜவ்வாதும் மணம் வீசும் பழநி மலையில் அசுத்த காற்று அனலாக வீசி சுற்றுலா பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது. குடிநீர் தாகத்தை பாட்டில் தண்ணீர் வாங்கி தீர்த்து கொள்ளலாம், குளிக்க எங்கிருந்து தண்ணீர் எடுத்து வருவது? காசு கொடுத்து தண்ணீர் வாங்கி குளிக்க வேண்டுமென்றால் கை காசை தண்ணீராய் செலவழிக்க வேண்டும். இப்படி தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
பக்தர்கள் என்ன சொல்கிறார்கள்: மாயவேல், கல்லிடைக்குறிச்சி: பழநி நகரில் சுத்தம் என்பதே சுத்தமாக இல்லை, எங்கு பார்த்தாலும் குப்பை காற்றில் பறக்கிறது. குறிப்பாக கோயில் அடிவாரம் பகுதியில் சுகாதாரத்தையும் எதிர்பார்க்க முடிவதில்லை. கல்லிடைக் குறிச்சியிலிருந்து 50 நபர்கள் சுவாமி தரிசனத்திற்காக வந்துள்ளோம். "பட்ஜெட் போட்டு சுற்றுலா வரும் எங்களை போன்றவர்கள், தனியார் ஓட்டல்களில் தங்குவது சாத்தியமில்லை. அதனால் இலவச குளியல் அறைகளை தேடி செல்கிறோம். அங்கு அலை மோதும் கூட்டங்களின் பின்னால் காத்திருந்து நாங்கள் 50 பேரும் குளித்து முடிக்க ஒரு நாள் ஆகிவிட்டது. கூடுதல் வசதிகளை செய்துதரவேண்டும்.
தொல்தமிழன், விழுப்புரம்: ஏற்கனவே பல "டோல் கேட் களில் சுங்க வரி செலுத்திவிட்டு பழநி வருகிறோம். இங்கே நகராட்சி நுழைவு கட்டணமாக, பஸ்சிற்கு ரூ.170 வசூலிக்கின்றனர். ஆனால் ரசீதில் ரூ.150 என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தெரியாத வெளிமாநில பக்தர்கள் வந்தால், இந்த கட்டண வசூல் பல மடங்காகிறது. கட்டண விபரம் எழுதிய போர்டுகள் மறைத்து வைத்து, அதிக பணம் வாங்கும் இவர்களை கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் உள்ளனர். பழநி வருவதற்கு முன் கேரளா சென்று வந்தோம், அங்கு இது போல எந்த பிரச்னைகளும் இல்லை. பக்தர்களுக்கு என, அனைத்து வசதிகளையும் செய்து வைத்திருக்கின்றனர்.
மகாலட்சுமி, திண்டுக்கல்: மலைக்கோயிலில் அன்னதானம் வழங்குமிடத்திலும், கை கழுவுமிடத்திலும் ஆங்காங்கே உணவு கழிவுகள் தேங்கிகிடக்கின்றன. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி கழிவுகள் தேங்கவிடாமல் செய்தால் நன்றாக இருக்கும். ஆலயதூய்மை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் மனம் நிம்மதியுடன் சுவாமி கும்பிட, இது போன்ற சிறு சிறு சுகாதாரகேடுகள் இடையூறாக இருக்கின்றன.
அலமேலுமங்கை, சேலம்: ஒரு நாள் வந்து செல்வதால் மலைக்கு மேல் நாங்கள் ஓய்வெடுத்து சுவாமி தரிசனம் செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை. பழநியில் தங்கி சுவாமி கும்பிட்டு, அருகில் இருக்கும் கோயில்களுக்கு செல்ல இருப்பவர்களுக்கு சற்று சிரமம் தான். மலைமேல் ஏறி வரும் போது படிக்கட்டுகளில் உள்ள நடை பாதை கடைகளால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இவற்றை முற்றிலுமாக அகற்றவேண்டும்.
பொய்த்து போன சரவண பொய்கை: பழநியை சுற்றி இடும்பன் குளம், வையாபுரி கண்மாய் உள்ளிட்ட பல நீர் ஆதாரங்கள் வறண்டு போனது. இந்த வரிசையில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்திய பிறகு புனித நீராடும் இடமாக இருந்த சரவண பொய்கையும் வறண்டு, பக்தர்கள் நீராட முடியாமல் ஏமாற்றத்தை தந்துள்ளது. பொய்கையில் நீர் இல்லை என்றாலும், பொய்கை அமைந்த இடத்தில் நீராடினால் புண்ணியம் தானே என யோசித்த அதிகாரிகள், அங்கே ஆழ்குழாய் அமைத்து தொட்டிகளில் நீர் நிரப்பி பக்தர்கள் குளிக்க வசதி செய்துள்ளனர். முருகேசன், பழநி: பொய்கை இருக்கும் இடத்தை சுற்றி தங்கும் விடுதிகள் பெருகிவிட்டன. அதனால் இப்பகுதியில் ஆழ்குழாய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டதால், பொய்கையில் நீர் வற்றிவிட்டது. தற்போது தொட்டி நீரில் பக்தர்கள் ஓரளவிற்கு மன நிறைவுடன் குளித்து செல்கின்றனர்.
பாலிதீன் பைகளுக்கு தடை: பழநி கோயில் கடைகளில் பாலிதீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, பேப்பர் பைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. அதே போல் நகராட்சியிலும் பாலிதீனுக்கு தடை உள்ளது. ஆனால் பக்தர்கள், தாங்கள் கொண்டு வரும் பாலிதீன் பைகளை, ரோட்டில் வீசிச்செல்கின்றனர். நகராட்சி நுழைவு கட்டணம் வசூலிக்கும் இடத்தில் பயணிகளிடம் பாலிதீன் பைகள் இருக்கிறதா என சோதனை செய்யலாம். பஸ்ஸ்டாண்ட் போன்ற மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் குப்பை தொட்டிகள் அமைத்து, தினமும் குப்பையை அகற்றவேண்டும். கோயில் நகரத்தில் தூய்மையை பேணும் பொறுப்பு, பொதுமக்களிடமும் உள்ளது. எனவே பாலிதீன் பைகளை எடுத்துச்செல்லாமல், கண்டகண்ட இடங்களில் குப்பைகளை கொட்டாமல் பொதுமக்கள் சுகாதாரம் பேண வேண்டும்.
மந்தகதியில் பணிகள்: நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கிரி வீதிகள் முழுவதையும், பழநி தேவஸ்தானம் பராமரித்து வருகிறது. பக்தர்களுக்கு தேவையான வசதிகளை தேவஸ்தானம் செய்து வந்தாலும் அனைத்து பணிகளும் மந்தமாக நடந்துவருகிறது. தேவஸ்தான அதிகாரிகள் கூறியதாவது: வழக்கம் போல இந்த ஆண்டும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து வருகிறோம். மலைகோயிலில், முதலுதவி மையம் அமைத்துள்ளோம். ரூ.65 லட்சம் செலவில், 14 புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. தைப்பூச நாட்களில் நடமாடும் கழிவறைகளையும் பயன்படுத்த உள்ளோம். பக்தர்கள் தங்குவதற்காக ஏற்கனவே உள்ள விடுதிகளுடன், புதிதாக நான்கு விடுதிகள் கட்டி வருகிறோம். புதிய விடுதிகள் ஜன., கடைசியில் மக்கள் தங்குவதற்காக திறக்கப்படும். மேலும் மூன்று விடுதிகள் கட்டும் திட்டமும் உள்ளது. மேற்கு கிரி வீதியில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளதால், நெரிசல் ஏற்படுகிறது. அந்த இடத்திற்கு பின்னால் உள்ள 53 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அதில் சுற்றுலா வாகன நிறுத்துமிடம் அமைத்தால் பைபாஸ் ரோடு வழியாக வாகனங்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும். ஊருக்கு உள்ளே வாகனங்கள் வர வேண்டிய அவசியமில்லை நெரிசலும் ஏற்படாது, என்றனர்.
பழநி கோயில் நிர்வாகம், நகராட்சி இணைந்து செயல்படுவது எப்போது?: பல லட்சம் பக்தர்கள் வந்து செல்லும் பழநியில், கோயில் நிர்வாகமும், நகராட்சியும் தனித்து செயல்படுகிறது. இவை இரண்டும் இணைந்து செயல்பட்டால் பக்தர்களின் வசதிகள் அனைத்தும் பூர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும். ஆனால், செலுத்தவேண்டிய வரியை கூட முழுமையாக செலுத்தாததால், கோயில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட முடியவில்லை. மேலும் கோயில் வருமானத்தில் ஒரு சதவீதத்தையாவது நகரின் வளர்ச்சிக்கு அரசு ஒதுக்கினால், அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, திருப்பதியை போல் தங்கும் வசதியையும் பக்தர்களுக்கு பழநியில் செய்துதரமுடியும். இதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். கோயில் நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் ஆகியவற்றை இணைத்து செயல்படும் வகையில் ஒரு அதிகாரியை நியமித்தால், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை எளிதில் செய்து தரமுடியும். இதன் மூலம் விழா காலங்களில், பக்தர்களின் பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வுகாண முடியும். நகராட்சி கமிஷனர் சரவணகுமார் கூறியதாவது: தைப்பூச விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக, 10 இடங்களில் தண்ணீர் பந்தல், 6 இடங்களில் நடமாடும் கழிவறை, தற்காலிக பஸ்ஸ்டாண்ட் போன்ற வசதிகளை செய்துள்ளோம். டாக்டர் ஒருவர் தலைமையில் மருத்துவக்குழு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 சுகாதார ஆய்வாளர்களை பணியில் ஈடுபடுத்தவுள்ளோம். கொசு மருந்து தெளிக்கும் வாகனமும் புதிதாக வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளை ஆய்வு செய்யவும், விலை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை நியாயமான முறையில் வசூலிக்கின்றனரா என்பதை அறிந்திடவும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் சோதனை செய்து வருகிறோம், என்றார்.
கண்துடைப்பான நடவடிக்கை: கிரி வீதிகளில் ஆக்கிரமித்துள்ள நடை பாதை கடைகளை ஒழுங்குபடுத்த, நடமாடும் "டிராபிக் கன்ட்ரோல் வேன் புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. கோயில் அடிவாரத்தை சுற்றி வரும் இந்த வாகனத்தில், ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தபடி, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் தேவஸ்தான அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னால் ஒருவன் பள்ளத்தை மூடி கொண்டே போக, பின்னால் ஒருவன் அதை மீண்டும் தோண்டி கொண்டு வருவதை போல. ரோந்து வாகனம் செல்லும் இடங்களில் நெரிசல் குறைவது போல இருந்தாலும், வாகனம் சென்ற பின் மீண்டும் நடை பாதையில் கடை விரித்து விடுகின்றனர். அடிவாரம் போலீஸ் ஸ்டேஷன் வாசல் வரை கடை விரித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
அசந்தால் "அபேஸ்: "அரோகராகோஷமிட்டு பக்தி பரவசத்தில் செல்லும் பக்தர்களின் உடமைகளை திருடும் கும்பல் உலா வந்துகொண்டிருக்கிறது. அசந்தால், எல்லாம் இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுவிடும். நடந்து செல்லும் பக்தர்களிடம் பொருட்களை வாங்க சொல்லி இம்சை செய்யும் சிறு வியாபாரிகள் தொந்தரவும் உண்டு. எத்தனை முறை ஆக்கிரமிப்புக்களை அகற்றினாலும் மீண்டும் பக்தர்கள் அதிகளவில் நடந்துசெல்லும் சன்னதிவீதி, கிரிவீதிகளில் தற்காலிக ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்தவண்ணம் உள்ளது.
ஆக்கிரமிப்பில் சன்னதி தெரு: மலைக்கோயிலுக்கு செல்லும் முக்கிய வழியாக சன்னதி தெரு உள்ளது. இங்குள்ள ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் இலவசமாக பக்தர்கள் தங்குவதற்கான தர்ம சத்திரங்கள்அந்த காலத்தில் அமைத்துள்ளனர். காலப்போக்கில் தர்மத்தை மறந்து வருமானத்தை பெருக்க சத்திரங்களின் முன் பகுதியை கடைகளுக்கு வாடகைக்கு விட்டு விட்டனர். 57 அடி அகலம் உள்ள சன்னதி தெருவில் நடு ரோடு வரை கடை விரித்து மேற்கூரை அமைத்துள்ள கடைகள் பெரிய காவடிகள், நீண்ட வேல் சுமந்து வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. ஆக்கிரமிப்புக்களை அவ்வப்போது அகற்றினாலும், மீண்டும் அடுத்தநாளே ஆக்கிரமிப்புக்கள் தோன்றுவது தொடர்கதையாக உள்ளது.
அச்சமில்லாமல் பயணிக்கலாம்: பக்தர்கள் எளிதாக மலைக்கு செல்ல 3 "வின்ச் மற்றும் "ரோப்கார் செயல்பட்டு வருகிறது. வின்ச்சில் 36 பேர் பயணிக்க முடியும். ரோப்காரில் கீழிருந்து மேல் 16 பேரும், மேல் இருந்து கீழே வர 13 நபர்களும் செல்லலாம். ரோப் காரில் சிறு தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டாலும் வெளியூரிலிருந்து "டெக்னீசியன்கள் வரவழைக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக "ரோப்கார் அந்தரத்தில் தொங்கி பயம் காட்டியது. அதன் பின் விழித்து எழுந்த தேவஸ்தான நிர்வாகம் மூன்று பொறியாளர்களை கொண்ட பாதுகாப்பு குழுவை நியமித்துள்ளது. இவர்கள் அவ்வப்போது "ரோப்கார், "வின்ச் ல் ஏற்படும் சிறு சிறு கோளாறுகளை சரி செய்து பராமரிக்கின்றனர். அதனால் இவற்றில் அச்சமில்லாமல் ஏறி மலையின் அழகை ரசித்தபடி பயணிக்கலாம்.