உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் சுற்றித் திரிந்த 11 குரங்குகள் பிடிபட்டன!

நெல்லையப்பர் கோயிலில் சுற்றித் திரிந்த 11 குரங்குகள் பிடிபட்டன!

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் சுற்றித்திரிந்த 11 குரங்குகளை வனத்துறையினர் பிடித்து மணிமுத்தாறு வனப்பகுதியில் விட்டனர். நெல்லையப்பர் கோயிலின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த குரங்குகள் கோபுரத்தின் சிதை பொம்மைகள், சி.சி.டி.வி., காமிரா ஒயர், குடிநீர் பைப்லைன் போன்றவற்றை சேதப்படுத்தியது. மேலும் அன்னதான திட்டத்திற்காக போடப்பட்டிருந்த காய்கறி தோட்டம், வாழை மரங்களை சேதப்படுத்தியதோடு, பக்தர்களிடம் இருந்து பொருட்களை பிடுங்கி சென்றன. இது குறித்து பக்தர்கள் கோயில் செயல் அலுவலரிடம் புகார் செய்தனர். கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், நெல்லை வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் நெல்லை வனத்துறை அலுவலர் தார்சியஸ் தலைமையில் அலுவலர்கள் கோயிலுக்குள் சுற்றித்திரிந்த 11 குரங்குகளை பிடித்து கூண்டில் அடைத்தனர். பின் வாகனம் மூலம் பிடிபட்ட குரங்குகளை மணிமுத்தாறு வனப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !