உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பூண்டி மாதா ஆலயத்தில் "கிறிஸ்துமஸ் கூட்டு பிரார்த்தனை

தஞ்சை பூண்டி மாதா ஆலயத்தில் "கிறிஸ்துமஸ் கூட்டு பிரார்த்தனை

தஞ்சாவூர்: தஞ்சையில், பூண்டி மாதா ஆலயம் உள்பட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு நடந்த சிறப்பு கூட்டு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர். தஞ்சையை அடுத்த திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு, கிறிஸ்துமஸ் பண்டிகை தின விழா வெகுவிமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. முன்னதாக, ஆலயத்தின் அருகில் அலங்கார குடில் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 11.40 மணிக்கு, ஆலயத்தின் முகப்பில் இருந்து பேராலய அதிபர் ஜெபாஸ்டின் தலைமையில் அருட் தந்தையர்கள் அருள்சாமி, சூசைமாணிக்கம், மரியதாஸ், பிரேம்குமார், சின்னப்பராஜ் ஆகியோர் வந்தனர். ஆலய திருப்பலி மேடையில், அருட்தந்தையர்களுக்கு பூரண கும்ப மரியாதை அளித்து, வரவேற்றனர். மேடையில் வைத்திருந்த குத்துவிளக்கை பேராலய அதிபர் ஜெபாஸ்டின் மற்றும் அருட்தந்தையர்கள் ஏற்றி வைத்தனர். இதையடுத்து, கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, பேராலய அதிபர் ஜெபாஸ்டின் சிறப்பு சொற்பொழிவாற்றினார். பின்னர், ஆலய மணி ஒலிக்கப்பட்டது. இயேசு அவதரிப்பை குறிக்கும் வகையில் குழந்தை இயேசு சொரூபத்தை, திருப்பலியில் பங்கேற்றவர்களுக்கு காண்பித்தார். அலங்கார குடியில் குழந்தை இயேசு சொரூபத்தை வைத்து, குடிலை புனிதம் செய்தார்.

அதிபர் ஜெபாஸ்டின், துணை அதிபர் அருள்சாமி ஆகியோர் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர். இதேபோல, மைக்கேல்பட்டி, பூதலூர், முத்தாங்கிபட்டி, மேகலத்தூர், மாரனேரி, மணத்திடல் மற்றும் தஞ்சை நகரத்திலுள்ள தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. தஞ்சையில், பூக்கார தெருவிலுள்ள திருஇருதய பேராலயம், மகர்நோன்பு சாவடி மேட்டுப்பிள்ளையார் கோவில் தெரு புனித சூசையப்பர் ஆலயம், வடக்குவாசல் புனித அருளானந்தர் பேராலயம், குழந்தை இயேசு ஆலயம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரோட்டிலுள்ள புனித லூர்து அன்னை, அண்ணா நகர் புனித செபஸ்தியார் ஆலயங்களிலும் நடந்த கூட்டுப்பிரார்த்தனையில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !