ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவம் நேற்று துவக்கம்!
திருச்சி: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, பகல்பத்து உற்சவம் நேற்று துவங்கியது. நேற்று துவங்கிய பகல்பத்து உற்சவம், வரும், 10ம் தேதி வரை, நடக்கிறது. நேற்று, உற்சவர் நம்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து, காலை, 6:15 மணிக்கு, தங்கப்பல்லக்கில் புறப்பட்டார். நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, விமானப் பதக்கம், ரத்தின அபயஹஸ்தம், தங்கக்காசு மாலை, 18 ஆரமுத்தாரம் உட்பட, பல்வேறு திருவாபரணங்கள் அணிந்து ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன், பகல்பத்து மண்டபமான அர்ச்சுண மண்டபத்துக்கு, காலை, 7:15 மணிக்கு வந்து சேர்ந்தார். அரையர்கள் திருப்பல்லாண்டு பாசுரத்தை, அபிநயத்துடன் பாடிக்காட்டினர். நம்பெருமாள், இசையை கேட்டவாறு, மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மாலை, 6:15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, உபயங்கள் கண்டருளியவாறு, இரவு, 9:45 மணிக்கு மூலஸ்தானம் சேர்ந்தார். பகல்பத்தின் நிறைவு நாளான, 10ம் தேதி, மோகினி அலங்காரம் எனப்படும், நாச்சியார் திருக்கோலத்தில், நம்பெருமாள் சேவை சாதிப்பார். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான, பரமபத வாசல் (சொர்க்கவாசல்), வரும், 11ம் தேதி அதிகாலை திறக்கப்படுகிறது. அன்று அதிகாலை, நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கி அணிந்து, மூலஸ்தானத்திலிருந்து புறப்படுவார். அதிகாலை, 4:30 மணிக்கு பக்தர்களுடன், பரமபதவாசல் கடப்பார். ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி, இரவு வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பரமபதவாசல் திறப்பு நாளிலிருந்து, அடுத்த, 10 நாட்கள், ராப்பத்து விழா நடக்கும். ஏகாதசியை முன்னிட்டு, மூலவர் ரங்கநாதர், முத்தங்கியில் காட்சியளிக்கிறார். வரும், 20ம் தேதி வரை, முத்தங்கி சேவை நடக்கும். புத்தாண்டு தினத்தில், ஏகாதசி விழா துவங்கியதால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.