உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரியூர் கோவிலில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பூ மிதித்து வழிபாடு!

பாரியூர் கோவிலில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பூ மிதித்து வழிபாடு!

கோபிசெட்டிபாளையம்: கோபி பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவிலில், நேற்று நடந்த குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, நேர்த்தி கடன் செலுத்தினர். கோபி அருகே பழமையான பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் ஜனவரி மாதம், குண்டம் தேர் திருவிழா, பாரம்பரிய முறைப்படி நடக்கிறது. இந்தாண்டு டிசம்பர், 26ல் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. ஜன., 6ம் தேதி அம்மனுக்கு விசேஷ சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. இந்த அலங்காரம் சிறப்பானது.முக்கிய நிகழ்ச்சிக்காக, கோவிலின் முன் குண்டம் அமைக்கப்பட்டது. கரும்பு என அழைக்கப்படும் விறகுகள், குண்டத்தில் அடுக்கப்பட்டு, கற்பூரம் ஏற்றி நெருப்பு மூட்டப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்து, கோவில் பூசாரிகள் முறையாக அம்மை அழைத்தனர். குண்டம் இறங்க அனுமதியும், வாக்கும் கேட்கும் நிகழ்ச்சி, சம்பர்தாயப்படி நடந்தது. கோவிலின் முன் கருட கம்பத்தில், திருக்கோடி தீபம் ஏற்பட்டது. குண்டத்துக்கு பூஜை செய்தபோது, அம்பாளின் உற்சவ மூர்த்தியான எழுந்தருள் நாச்சியம்மன் மேற்கு பார்த்து, இருகரம் ஏந்திய நிலையில், குண்டம் அருகே எழுந்தருளினார். தலைமை பூசாரி லோகநாதன் குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்து, குண்டத்தில் உள்ள நெருப்பு கனலை, தனது கைகளால் மூன்று முறை வானத்தை நோக்கி இறைத்தார். பின், பூ, பழம், எலுமிச்சை போன்றவை வானத்தை நோக்கி வீசினார். அப்போது, கூடி இருந்த பக்தர்கள், மிகுந்த ஆர்வத்துடன், அவற்றை பிடித்தனர். பூ, கனிகள், கையில் கிடைப்பது, மிகவும் பாக்கியம் என பக்தர்கள் கருதினர். தலைமை பூசாரி குண்டம் இறங்கியதை தொடர்ந்து, மற்ற பூசாரிகள், குண்டம் இறங்கினர்.15 நாட்களாக விரதம் மேற்கொண்டு, நேற்று முன்தினம் மாலை முதல், இரவில் கொட்டும் பனியில் விடியவிடிய நீண்ட வரிசையில் நின்ற, ஆண், பெண் பக்தர்கள், சிறுவர், சிறுமியர்கள் என, ஆயிரக்கணக்கானவர்கள் குண்டம் இறங்கினர். மெட்டல் டிடெக்டர் மூலம் பக்தர்கள் சோதனைக்குப்பின், கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.சப் கலெக்டர் சந்திரசேகர சாகமுரி, எஸ்.பி., பொன்னி, திருநெல்வேலி போக்குவரத்து இணை ஆணையர் பாலன், தொழிலதிபர் தங்கம் பழனிசாமி, முன்னாள் நகராட்சி தலைவர் நல்லசாமி, பச்சைமலை திருப்பணி கமிட்டி தலைவர் ஈஸ்வரன், அரசு தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் தனபால், முன்னாள் அறங்காவலர் தலைவர் முத்துவேலப்பன், யூனியன் தலைவர் சத்தியபாமா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நல்லகுமார், சண்முகத்தரசு, லாரி உரிமையாளர் சங்கம் இளங்கோ உட்பட பலர் பங்கேற்றனர்.இன்று (10ம் தேதி) மாலை, 4 மணிக்கு தேரோட்டமும், 11ம் தேதி இரவு, 12 மணிக்கு கோவிலில் இருந்து மலர் பல்லக்கு மேளதாள கச்சேரியுடன், கோபி வந்தடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !