உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலையில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சென்னிமலையில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், தைப்பூச தேர்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 17ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. சென்னிமலை மலை மேல் எழுந்தருளி உள்ள சுப்பிரமணியருக்கு, தைப்பூச விழா, 15 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழாவை, இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த நாட்டமை, பெரியதனகாரர்கள் முன்னிலையில், மலை மேல் உள்ள கொடி மரத்தில், சேவல் கொடியை ஏற்றி, தைப்பூச விழாவை துவக்கி வைத்தனர். தலைமை குருக்கள் ராமநாதசிவம், கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்து, ஸ்வாமிகளுக்கும், கொடிமரத்துக்கும், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியை நடத்தினர். கொடியேற்றத்துக்காக, சென்னிமலை கிழக்கு ராஜா வீதி கைலாசநாதர் கோவிலில் இருந்து, ஸ்வாமி புறப்பாடு, காலை, 7 மணிக்கு துவங்கி, மலை மீது படி வழியாக எடுத்து செல்லப்பட்டது. அங்கு விநாயகர் வழிபாடு, முளைப்பாரி பூஜைகள், காப்பு கட்டும் நிகழ்ச்சிகள், மயூரயாகமும் நடந்தது.கோவில் செயல் அலுவலர் பசவராஜன், தேவகிரி முருகதாஸ், காவேரி ரங்கன், மெட்றோ டெக்ஸ் மேலாளர் சரவணகுமார், எஸ்.ஏ.பி., டெக்ஸ் மேலாளர் சிவசுப்பிரமணியம், முத்துகணேஷ் உட்பட இசை வேளாளர் சமூகத்தினர் உட்பட பலர் பங்கேற்றனர்.வரும், 17ம் தேதி காலை, 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தைப்பூச விழாவின் முக்கிய விழாவான மகாதரிசனம், 21ம் தேதி இரவு, 8 மணிக்கு நடக்கிறது.
அன்று சென்னிமலை நகரில், நடராஜபெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் முறையே, வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா நடக்கும். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வர். வரும், 21ம் தேதி நடக்க உள்ள மகாதரிசன நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், ஈரோடு ஆர்.டி.ஓ., குணசேகரன் தலைமையில் நடந்தது. பெருந்துறை டி.எஸ்.பி., பாஸ்கரன் முன்னிலை வகித்தார். விழா நாளில், தடையற்ற மின்சாரம் வழங்குதல். பல இடங்களில் குடிநீர் வசதி செய்ய வேண்டும். பக்தர்கள் வருகைக்காக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ், மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேரோட்டம், மகாதரிசன நாட்களில், அதிக அளவில் ஆண், பெண் போலீஸார் நியமிக்க வேண்டும், என முடிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !