சொர்க்கவாசல் திறப்பு வைபவம் சுவாமி வீதியுலா நேரம் மாற்றம்
திருப்பூர்: வீரராகவ பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறப்பு வைபவத்தை தொடர்ந்து, காலை 6.00 மணிக்கு தேரோடும் வீதிகளில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில், நாளை காலை 10.00 மணிக்கு, மோகினி அலங்காரம், நாச்சியார் திருக்கோலத்தில் வீதியுலா நடக்கிறது. 11ம் தேதி அதிகாலை 3.00 மணிக்கு, பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும் சொர்க்கவாசலில் பகல் 11.00 மணி வரை, பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்த பிறகு, வீதியுலா நடக்கும். இந்தாண்டு, கோவிலில் நடந்து வரும் திருப் பணிகள் காரணமாக வழக்கமான சொர்க்க வாசல் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கோவில் வளாகத்திற்குள் தற்காலிகமாக, சொர்க்கவாசல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சொர்க்கவாசல் வழியாக சுவாமி பிரவேசித்ததும், காலை 6.00 மணிக்கு வீதியுலா நடக்கிறது. நாம சங்கீர்த்தனம், கோலாட்டம், கும்மியாட்டம், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் முழங்க, தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா நடக்கிறது. அதன்பின், சொர்க்கவாசல் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையில் வீற்றிருந்து நம்பெருமாள் அருள் பாலிக்கிறார். சுவாமி தரிசன வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு வாசல் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் வளாகம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மூலவர் தரிசனம் முடிந்து, சொர்க்கவாசல் வழியாக வந்து, சிறப்பு தரிசனம் பார்க்கும் வகையிலும், பிரதான வாயில் வழியாக வெளியே செல்லும் வகையிலும் வழி அமைக்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கோவிலில் நடந்து வரும் திருப் பணிகள் காரணமாக வழக்கமான சொர்க்க வாசல் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கோவில் வளாகத்திற்குள் தற்காலிகமாக, சொர்க்கவாசல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சொர்க்கவாசல் வழியாக சுவாமி பிரவேசித்ததும், காலை 6.00 மணிக்கு வீதியுலா நடக்கிறது.