உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலாயுதசாமி கோவிலில் உற்சவர் திருவீதியுலா

வேலாயுதசாமி கோவிலில் உற்சவர் திருவீதியுலா

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் உற்சவர் திருவீதியுலா நடந்தது. கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி சஷ்டி குழுவினர், ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் மாலை அணிந்து, தைப்பூசத்தன்று பழநி முருகனை வழிபடுவதற்காக பாதயாத்திரை சென்று வந்தனர். அதன்படி 34ம் ஆண்டு பாதயாத்திரையை முன்னிட்டு, சஷ்டி குழுவினர் மார்கழி மாதம் முதல், மாலை அணிந்து விரதமிருந்து பொன்மலை வேலாயுதசாமியை வழிப்பட்டு வந்தனர். இந்நிலையில், பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், தைப்பூசதை ஒட்டி மூன்று நாள் தேரோட்டம் நடத்தப்படுகிறது. இதில், தினமும் வேலாயுதசாமி உற்சவர் திருவீதி உலா மலையை சுற்றி வருகிறது. நேற்றுமுன்தினம் மாலை நடந்த திருவீதி உலாவில், சஷ்டி வழிபாட்டு குழுவினர் கிரிவலத்தை பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி கோபண்ண மன்றாடியார் துவக்கி வைத்தார். தொடர்ந்து சுவாமி திருவீதி உலாவுடன் சஷ்டி குழுவினரும், வேல்படை, சேவல் கொடி, ஆறுமுக காவடியுடன் ஆடல், பாடலுடன் கிரிவலம் வந்தனர். பின்பு, உற்சவமூர்த்திக்கு வேல் பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து சஷ்டி வழிபாட்டு குழுவினர் நேற்று அதிகாலை 5.00 மணிக்கு வேலாயுதசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை பின் மலை அடிவாரத்தில் இருந்து பாதயாத்திரையை துவக்கினர். இக்குழுவினர் வரும் 17ம் தேதி தைப்பூசத்தன்று பழநி சென்று பாலதண்டாயுதபாணியை வழிப்பட்டு திரும்புகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சஷ்டி வழிபாட்டு குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தியின் ஆலோசனையின் பேரில் சஷ்டி குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !