வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கோலாகலம்!
வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று நடந்த தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து வந்தனர். வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலின் 9ம் ஆண்டு தைப்பூசத்திருவிழா, கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்றுமுன்தினம் மாலை திருக்கல்யாணம் நடந்தது.நேற்று காலை 10.00 மணிக்கு, வால்பாறை ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில், காமாட்சி அம்மன் கோவிலிருந்து பால்குடம் ஊர்வலமாக எடுத்தும், நல்லகாத்து ஆற்றிலிருந்து அங்க அலகு பறவைக்காவடி எடுத்தும், பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து முருகனுக்கு பால்அபிஷேக பூஜை நடந்தது. பகல் 12.00 மணிக்கு அன்னதான விழாவை வால்பாறை எம்.எல்.ஏ., ஆறுமுகம், தாசில்தார் பாலகிருஷ்ணன், நகராட்சித்தலைவர் சத்தியவாணிமுத்து ஆகியோர் துவக்கி வைத்தனர். மாலை 4.00 மணிக்கு விஷ்வஹிந்த் பரிஷத் சார்பில் திருவிளக்கு பூஜையும், மாலை 6.30 மணிக்கு முருகன் தேவியருடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி திருவீதி உலாவும் நடந்தது.விழாவிற்கான ஏற்பாடுகளை தைப்பூச விழாக்குழு தலைவர் மதனகோபால், ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் செய்திருந்தனர். காவடி எடுத்த குழந்தைகள்வால்பாறையில் நேற்று நடந்த தைப்பூசத்திருவிழாவில், நல்லகாத்து ஆற்றிலிருந்து பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், அலகு பூட்டியும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதில் குழந்தைகள் காவடி எடுத்தும், கருப்புசாமி வேடமணிந்தும் இருந்தனர். வால்பாறை அரசு கலைக்கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் கோவிலில் அன்னதானம் வழங்கினர்.