உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேலாயுதசாமி கோவில் தேரோட்டம் நிறைவு!

வேலாயுதசாமி கோவில் தேரோட்டம் நிறைவு!

கிணத்துக்கடவு :கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் மூன்றாம் நாள் தேரோட்டமான நேற்றுமுன்தினம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் "அரோகரா கோஷமிட்டுவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், தைப்பூச திருவிழா கொடியேற்றுத்துடன் கடந்த 11ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 17ம் தேதியன்று துவங்கியது. கோவில் உற்சவரான முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பிரகாரத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, உற்சவர் கோவில் அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர், 21 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் வெள்ளிக்கவசத்துடன் வேலாயுதசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் "அரோகரா கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்து, பொள்ளாச்சி-கோவை மெயின்ரோடு வழியாக சிவலோகநாதர் கோவில் வளாக "அக்னி மூலையில் தேர்நிலை நிறுத்தப்பட்டது. இரண்டாம் நாளான 18ம் தேதியன்று மாலை 5.00 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டு, தேரோடும் வீதி வழியாக கிருஷ்ணசாமிபுரம் வீதியில் "வாயு மூலைக்கு இழுத்துச்சென்று மாலை 6.30 மணிக்கு நிலை நிறுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களின் தரிசனத்திற்காக நிறுத்தப்பட்ட தேர், மூன்றாம் நாளான நேற்றுமுன் தினம் மாலை 5.00 மணிக்கு, வேளாண்மைத்துறை அமைச்சர் தாமோதரன், பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரிவெற்றிவேல் கோபண்ண மன்றாடியார், செயல் அலுவலர் வெண்மணி, கிணத்துக்கடவு ஒன்றியக்குழுத் தலைவர் ராஜமாணிக்கம், இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், அம்மா பேரவை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். பின் தேர் பொதுமக்களால் வடம் பிடிக்கப்பட்டு, கோவில் அடிவாரத்தை மாலை 7.30 மணிக்கு வந்தடைந்தது. இரவு முழுவதும் தேர் நிற்பதால், பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.தேரோட்டத்தின் போது, தேர் செல்லும் பாதையில் உள்ள மின்கம்பிகளை மின்வாரியத்தினர் கழற்றி மாற்றினர். பஸ் போக்குவரத்து மாற்றுப்பாதைக்கு மாற்றிவிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !