மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் முதலாமாண்டு நிறைவு விழா
மேட்டூர்: மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில், இன்று (ஜன., 23), கும்பாபிஷேக விழாவின் முதலாமாண்டு நிறைவு விழா நடக்கிறது. சேலம் மாவட்டம், மேட்டூர் பத்ரகாளியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம், கடந்த ஆண்டு, ஜனவரி, 23ம் தேதி நடந்தது. இதில், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். அதையடுத்து, இன்று, மகா கும்பாபிஷேக விழாவின் முதலாமாண்டு நிறைவு விழா நடக்கிறது. காலை, 8 மணிக்கு, தாரமங்கலம் மடம் உமாபதி குருக்கள் தலைமையில், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி பூஜை, 108 வலம்புரி சங்காபிஷேகம் நடக்கிறது. பகல், 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மதியம், 1 மணிக்கு புஷ்ப அலங்காரம் நடக்கிறது. மதியம், 1.30 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை, 5 மணிக்கு அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6 மணிக்கு கோவில் வளாகத்தில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம், அன்பழகனார் அருளுரை, மாலை, 6.30 மணிக்கு, பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்துள்ளனர்.