கோவில்கள் நிர்வாகம் பரம்பரை அறங்காவலர்களிடம் வருமா!
சென்னை:இந்து கோவில்களின் நிர்வாகத்தை, பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க, சிறப்பு திட்டம் வகுக்க, இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை, இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த, டிராபிக் ராமசாமி, தாக்கல் செய்த மனு:கோவில்கள் மற்றும் தர்ம ஸ்தாபனங்களை கண்காணிக்க, 1959ல், சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்து கோவில்கள் மட்டுமே, அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், கொண்டு வரப்பட்டது.கோவில்களுக்கு, கணிசமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை பாதுகாக்க, கோவில்களின் நிர்வாகத்தை, தங்கள் வசம் கொண்டு வந்ததாக, அரசு தரப்பில் கூறப்படுகிறது.கடந்த, 1976 முதல், கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கணக்கு வழக்குகளை, தனி அதிகாரி மூலம், தணிக்கை செய்யவில்லை. அறநிலைய துறையின், தணிக்கைத் துறை தான், நடவடிக்கை எடுக்கிறது; இதில், ஏராளமான குறைபாடுகள் உள்ளன.கோவில் சொத்துக்களில் இருந்து, உண்மையான வருமானத்தை ஈட்டாமல், கலாசார மற்றும் பண்பாட்டு இடங்களை சேதப்படுத்துகின்றனர். கோவில்களை, வணிக மயமாக்கி விட்டனர். கோவில்களுக்குள், கிரானைட், டைல்ஸ் பதித்து, நவீனமயமாக்கி விட்டனர்.திருச்சி அருகே, சிவன் கோவிலில், மரகத சிவலிங்கம் திருடப்பட்டு விட்டது. பொருளின் மதிப்பு, 2,000 முதல், 3,000 கோடி ரூபாய் வரை இருக்கும். அதை மீட்க, அரசும், அறநிலையத் துறையும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழமை வாய்ந்த சிலைகளை, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள், மீட்டுஉள்ளன. அவற்றை கொண்டு வந்து, கோவில்களில் வைக்க, ஆர்வம் காட்டவில்லை.
சட்டப்படி, ஒவ்வொரு கோவிலும், அறங்காவலர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். இவர்களில் பெரும்பாலோர், பரம்பரை அறங்காவலர்கள். இவர்களை, நிர்வாக அதிகாரியின் கீழ், அரசு கொண்டு வந்து விட்டது. கோவில் சொத்துக்களை, அரசு தவறாக நிர்வகிக்கிறது. அரசின் பிடியில் இருந்து, கோவில் சொத்துக்களை மீட்க வேண்டிய தருணம் இது. எனவே, கோடிக்கணக்கான மதிப்புடைய கோவில் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதை கண்டுபிடிக்க, அந்த கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது முதல், சிறப்பு தணிக்கை செய்ய, மத்திய தணிக்கை துறைக்கு உத்தரவிட வேண்டும்.இந்து கோவில்களில் உள்ள, நிர்வாக அதிகாரிகளை திரும்பப் பெற்று, நிர்வாகத்தை, பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க, சிறப்பு திட்டம் வகுக்கக் கோரிய மனுவை, தமிழக அரசு பரிசீலிக்க, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு, தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி ரவிச்சந்திரபாபு அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.