பெருமாள் கோவிலில் 108 கலசாபிஷேகம்!
கள்ளக்குறிச்சி: உலக நலன் வேண்டி கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் 108 கலசாபிஷேக வைபவம் இரண்டு நாட்கள் நடந்தது.கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன் தினம் மாலை 108 கலசங்களை ஆவாகனம் செய்து பூஜையும் யாகமும் நடத்தினர். நேற்று காலை பெருமாள் தாயார் உபயநாச்சியார் உற்சவர்களுக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது.தொடர்ந்து விஸ்வக் சேனர் வழிபாடு நடத்தப்பட்டது. 108 கலசங்களுக்கு இரண்டாம் கால பூஜைகள் யாகத்தில் மங்கள திரவியங்களை கொண்டு பூர்ணாகுதி சேர்ப்பித்தனர். மங்கள வாத்தியங்கள் முழங்க பெருமாளுக்கும் தாயாருக்கும் 108 கலசாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. சர்வ அலங்காரங்களுக்கு பின் விஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்களை வாசித்து பூஜித்தனர். சாற்றுமுறை சேவை, ஆராதனத்திற்கு பின், மகாதீபாராதனை நடந்தது. தேசிய பட்டர் குழுவினர் வைபவத்தை நடத்தி வைத்தனர்.