உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை குழந்தையேசு ஆலய பெருவிழாவில் கொடியேற்றம்

தஞ்சை குழந்தையேசு ஆலய பெருவிழாவில் கொடியேற்றம்

தஞ்சாவூர்: தஞ்சையில், குழந்தையேசு ஆலயத்தில் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு நடந்த கொடியேற்றம் நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்று, கூட்டு பிரார்த்தனை செய்தனர். தஞ்சையில், நிர்மலா நகரில் கார்மெல் குழந்தையேசு ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியுடன் வெகு விமரிசையாக நேற்று துவங்கியது. இதில், விழாவின் முக்கிய அம்சமாக, அற்புத குழந்தையேசு ஆசீர் அளிக்கும் அடையாள சின்னமாக, 53 அடி உயரத்தில், பித்தளை கொடி மரம் அழகாக வடிவமைக்கப்பட்டு, புனிதம் செய்யப்பட்டு, முதல்முறையாக கொடியேற்று நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்று, கூட்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை, 6 மணி, 9 மணி, 11 மணி மற்றும் மாலை, 5.30 மணிக்கு நவநாள் திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது. ஃபிப்., மாதம், 2ம் தேதி (ஞாயிறு) காலை, 11 மணிக்கு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு திருப்பலி, தொடர்ந்து நற்செய்தி கொண்டாட்டம் நடக்கிறது. 6ம் தேதி மாலை, 5.30 மணிக்கு சென்னை-மயிலை மறைமாவட்ட முன்னாள் பேராயர் சின்னப்பா தலைமையில் ஆண்டு பெருவிழா, சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படும். இதைத்தொடர்ந்து, திருப்பலி நிறைவில் அற்புத குழந்தையேசு மின் அலங்கார தேர் பவனி நடக்கிறது. மேலும் பெருவிழாவையொட்டி திருவிழா தினங்களில், ஒவ்வொரு நாளும் நவநாள் திருப்பலிக்கு பிறகு, கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை குழந்தையேசு ஆலய அதிபர் சேவியர்தாஸ் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !