திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் பாலிதீன் பைக்கு தடை வருமா?
திருவேற்காடு: திருவேற்காடு தேவிகருமாரியம்மன் கோவிலில், பாலிதீன் பை பயன்பாட்டில் உள்ளது. அறநிலையத் துறை, அதை தடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர். பாலிதீன் பை பயன்பாட்டை தவிர்க்கும் வகையில், கடந்த சில மாதங்களுக்கு முன், திருவேற்காடு நகராட்சியில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து, 150 கிலோவுக்கும் மேற்பட்ட பாலிதீன் பைகளை பறிமுதல் செய்து எச்சரிக்கையும் விடுத்தனர்.அதேபோல், கோவில்களில், பாலிதீன் பைகளை பயன்படுத்த வேண்டாம் என, இந்து சமய அறநிலையத் துறையும் அறிவுறுத்தியுள்ளது. ஆனால், இன்று வரை, திருவேற்காடு தேவிகருமாரியம்மன் கோவிலில், பிரசாத கடையில், பாலிதீன் பை தான் வழங்கப்படுகிறது. மேலும், அம்மன் படம் அச்சிடப்பட்ட பாலிதீன் பை, ஐந்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாலிதீன் பைகளை கோவிலில் வினியோகிக்க தடை விதிக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.