உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்பராயப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

கம்பராயப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

கம்பம்: கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் பிப். 12 ல் நடைபெறுவதை ஒட்டி, யாககுண்டங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள பழமையான கோயில்களில், கம்பம் கம்பராயப் பெருமாள், காசிவிஸ்வநாதர் கோயில் முதன்மையானது. ஒரே வளாகத்தில் சிவனும், பெருமாளும் எழுந்தருளியுள்ள தலமாகும். 14 ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோயில் மதுரையை ஆண்ட விஸ்வநாதர் நாயக்கரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. கம்பராயப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம், பிப்.12 ல் நடைபெறுவதை ஒட்டி கடந்த ஓராண்டிற்கும் மேலாக கோயில் திருப்பணிகள் நடைபெற்றது. கம்பம் ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் மேலாண்மை இயக்குனர் ரா.பாஸ்கர், ரூ. 60 லட்சத்தில் இந்த திருப்பணிகளை செய்து கொடுத்துள்ளார். மேலும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

கோயில் செயல் அலுவலர் விஸ்வநாத் கூறியதாவது: " ஆஞ்சநேயர் சன்னதி, தாயார் மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேற்கு, கிழக்கு தோரணவாயில்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. 4 விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டது. புதிய கொடிமரம் பிரதிஷ்டை, கோயிலை சுற்றி தரைதளம், கோபுர விமானத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கவசம், கொடி மரத்திற்கு தாமிர கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளை சிற்பகலா ரத்னா ஸ்தபதி கரூர் பி.கருப்பையா தலைமையில் 20 பேர் செய்து கொடுத்துள்ளனர். வரும் 12 ல் நடைபெறும் கும்பாபிஷேகத்தை, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ரெங்கநாத பட்டாச்சாரியார் தலைமையில் 35 பட்டாச்சாரியார்கள் பங்கேற்று நடத்துகின்றனர். இதற்கென கோயில் வளாகம் சுத்தப்படுத்தி புதுப்பொலிவுடன் மாற்றும் பணி நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் பிப். 10 ல் யாகபூஜைகள் துவங்குகிறது. இதற்கென கோயில் வளாகத்தில் பெருமாளுக்கு பிரதான 5 யாக குண்டங்கள், பரிகார தேவதைகள் 17 தெய்வங்களுக்கு 17 யாக குண்டங்கள், 17 வேதிகைகள் ஆக மொத்தம் 22 யாக குண்டங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

மகாகும்பாபிஷேகத்தன்று, உத்தமபாளையம் தாலுகா முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிதண்ணீர், அன்னதானம் செய்வதற்கு, ராமலிங்கம் பிள்ளை டிரஸ்ட் நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !