கும்பகோணத்தில் 3 கோவில்களில் மாசிமகப் பெருவிழா தொடக்கம்
கும்பகோணத்தில் சக்கரபாணி சுவாமி, ஆதிவராக பெருமாள், ராஜகோபால சுவாமி கோவில் ஆகிய கோவில்களில் மாசிமகப் பெருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சக்கரபாணி சுவாமி கோவிலில் காலை 12 மணிக்கு கொடிமரம் அருகே சக்கரபாணி சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாரோடு எழுந்தருளினார். அப்போது, கொடிமரத்திற்கு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.மாசிமகத்தை முன்னிட்டு, வரும் 15-ம் தேதி விஜயவல்லி, சுதர்சனவல்லி தாயார் சமேதரராக சக்கரபாணி சுவாமி தேரில் எழுந்தருளுகிறார். அன்று காலை 8.30 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறவுள்ளது. அன்று இரவு காவிரி சக்கரபடித் துறையில் தீர்த்தவாரி நடக்கிறது.இதேபோல், ராஜகோபால சுவாமி கோவிலில், கொடிமரம் அருகே ருக்மணி, சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி எழுந்தருளியவுடன் கொடியேற்றமும், ஆதிவராக பெருமாள் கோவில் கொடிமரம் அருகே பெருமாள் அம்புஜவல்லித்தாயாரோடு எழுந்தருளியதை தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.மாசிமகப் பெருவிழாவை முன்னிட்டு சாரங்கபாணி கோவிலின் பொற்றாமரை குளத்தில் தெப்ப உத்சவம் நடைபெறும். இதற்காக 600 டின்கள் திருச்சியிலிருந்து வரவழைக்கப்பட்டு 34 அடி நீளமும் 34 அடி அகலமும் கொண்ட தெப்பம் கட்டும் பணியும், கோவிலை சுற்றி வர்ணம் பூசும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.