கோவிலை இடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் தயக்கம்!
கடலூர்: கடலூரில் பிரதான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கோவிலை அகற்ற பக்தர்கள் முன்வந்து புதிதாக கட்டிய போதிலும், பழைய கோவிலை இடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் தயக்கம் காட்டி வருவதால், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலூரில் இருந்து திருவந்திபுரம் வழியாக சங்கராபுரம் செல்ல நெடுஞ்சாலை உள்ளது. 60 அடி அகலம் கொண்ட இந்த சாலை, கடலூர் நகரின் பிரதான பகுதியாக உள்ளது. சாலையில் வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் இவை அனைத்திற்கும் மேலாக பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவிலுக்கு இந்த வழியாகவே செல்ல வேண்டும். இதனால், இச்சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும். பல ஆண்டுகளாக உள்ள இந்த சாலை, ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அளவிற்கு குறுகலான சாலையாக அமைக்கப்பட்டது. இச்சாலையில், திருப்பாதிரிப்புலியூர் சஞ்சீவி நாயுடு தெரு சந்திப்பில் சக்தி விநாயகர் கோவிலும், அக்கிள் நாயுடு தெரு சந்திப்பில் முத்தாலம்மன் கோவிலும் உள்ளது. இரண்டு கோவில்கள் அருகில் சாலை குறுகலாக உள்ளதால், அப்பகுதியில் தினம் தினம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தற்போது இந்த சாலை ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பஸ் நிலையம் மற்றும் செம்மண்டலம் மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் போடி செட்டி தெரு, சஞ்சீவி நாயுடு தெரு வழியாக திருவந்திபுரம் சாலையில் கோவில் அருகே திரும்ப வேண்டும். இந்த வளைவுப் பகுதியில் சக்தி விநாயகர் கோவில் உள்ளதால் வாகனங்கள் திரும்பும் போது போக்குவரத்து ஸ்தம்பிப்பது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறையினர் கடந்தாண்டு திருவந்திபுரம் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது சாலையில் மத்தியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் மற்றும் சாலையின் பெரும்பகுதியை அடைத்துக் கொண்டுள்ள முத்தாலம்மன் கோவில் நிர்வாகத்தினரிடம், சாலை விரிவுப்படுத்த வேண்டியுள்ளதால், கோவிலை நீங்களாகவே இடித்துக் கொள்ளுங்கள் என கூறினர். அதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் சப் கலெக்டர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. அப்போது பக்தர்கள் தரப்பில் பாடல் பெற்ற ஸ்தலமான பாடலீஸ்வரர் கோவிலின் மாட வீதிகளின் நான்கு மூலைகளிலும் விநாயகர் கோவில் அமைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. அதனால் அதனை இடிக்கக்கூடாது என்றனர். அதிகாரிகளின் தீவிர முயற்சிக்குப் பின், அதே பகுதியில் புதிதாக கோவிலைக் கட்டிக் கொள்ள பக்தர்கள் ஒப்புக் கொண்டனர். அதன்படி திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஸ்டேஷனையொட்டி சக்தி விநாயகருக்கு 7.5 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கோவில் கட்டி கடந்த நவம்பர் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தினர். இதேபோன்று கூத்தப்பாக்கம் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோவிலை இடித்து அகற்றும் பொருட்டு அப்பகுதி பக்தர்கள் புதிதாக கோவிலைக் கட்டி நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் செய்துள்ளனர். மேலும், முத்தாலம்மன் கோவிலை இடித்து பின் பகுதியில் கட்டுவதற்காக கடந்த 9ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டுள்ளது. நாளை பூமி பூஜை நடைபெற உள்ளது. திருவந்திபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகவே உள்ளது. கோவிலை அகற்றிக் கொள்ள பக்தர்கள் ஒப்புக் கொண்டும் நெடுஞ்சாலைத் துறையினர் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த பிரச்னையில் கலெக்டர் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.