பாண்டியர் கால நாணயம் பழநியில் கண்டுபிடிப்பு!
பழநி: பழநியில், 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சுந்தரபாண்டிய மன்னரின் நாணயம் கிடைத்துள்ளது. தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி கூறியதாவது: பழநியைச் சேர்ந்த, நாணய சேகரிப்பாளர் சுகுமார் போஸ், ஆற்றில் மண் அரிப்பவர்களிடம் இருந்து, பழங்கால நாணயங்களை சேகரித்து வருகிறார். அதில், 13ம் நூற்றாண்டில், பாண்டிய மன்னர் சுந்தரபாண்டியன் ஆட்சிகாலத்தில் வெளியிடப்பட்ட, பித்தளை நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. நாணயத்தின் முகப்பில், சுந்தரன் என்ற பெயர், இரண்டு வரிகளில் எழுதப்பட்டுள்ளது. மறுபக்கம், பாண்டிய பேரரசின் அரசு முத்திரையான, இணை கயல் செண்டு பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது, நின்ற நிலையில் மீன்களும், இடையில் வலப்புறம் வளைந்த செண்டும் பொறிக்கப்பட்டு உள்ளது. நாணயத்தின் எடை, 800 மில்லி கிராம்; குறுக்கு வட்டம், 15 மில்லி மீட்டராக உள்ளது. பழநி பகுதியை, கொங்குச் சோழர்களும், பாண்டியர்களும் மாறி, மாறி ஆட்சி செய்துள்ளனர். இதற்கான கல்வெட்டுகள் சுற்றுப் பகுதிகளில் உள்ளன. தற்போது, சுந்தரபாண்டியன் காலத்து, அரியவகை நாணயம் கிடைத்துள்ளது. இது, மேலும் பல வரலாற்று ஆய்வுகளுக்கு உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.