தினமும் 3 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கும் திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி; உலகப்புகழ் பெற்ற திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் ஆலயம், கோடிக்கணக்கான பக்தர்களின் வருகைக்கு மட்டுமல்லாமல், "பசி என்ற சொல்லுக்கே இடமில்லாத புனிதத் தலம்" என்ற பெருமைக்கும் பெயர் பெற்றது. திருமலைக்கு வரும் எந்தவொரு பக்தரும் பசியோடு திரும்புவதில்லை; ஒவ்வொருவரும் நிறைந்த வயிற்றுடனும், திருப்தியான மனதுடனும் வீடு திரும்புகின்றனர்.ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் ஆசியுடனும், தேவஸ்தான அன்னப்பிரசாதத் துறையின் அர்ப்பணிப்புடனும், தினமும் சுமார் 3 லட்சம் பக்தர்களுக்கு மிக நேர்த்தியாக அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது.
திருமலையில் இதற்காக மூன்று பிரம்மாண்ட சமையல் கூடங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன:மாத்ருஸ்ரீ தரிகொண்ட வெங்கமாம்பா அன்னப்பிரசாத வளாகம், ஸ்ரீ அக்ஷயா சமையல் கூடம், வகுளமாதா சமையல் கூடம் வைகுண்டம் வரிசைகளில் காத்திருக்கும் பக்தர்கள் முதல், தங்கும் விடுதிகளில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் உணவு சென்றடைவதை தேவஸ்தானம் உறுதி செய்கிறது. தினமும் வெங்கமாம்பா வளாகம் 74,000 பேர்,ஸ்ரீ அக்ஷயா சமையல் கூடம்1,48,000 பேர், வகுளமாதா சமையல் கூடம்77,000 பேர் உணவு சாப்பிடுகின்றனர். காலை: கோதுமை ரவை உப்புமா / சூஜி ரவை உப்புமா / சேமியா உப்புமா / பொங்கல், சட்னி மற்றும் சாம்பார். மதியம் மற்றும் இரவு (8 வகை உணவுகள்): சர்க்கரை பொங்கல், சாதம், கூட்டு, சட்னி, வடை, சாம்பார், ரசம் மற்றும் மோர். இதர உணவுகள்: சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம், சுண்டல், பால், டீ மற்றும் காபி. விசேஷ நாட்கள்: பாதாம் பால், பிஸ்கட் மற்றும் ஜூஸ் பாக்கெட்டுகள் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. மறைந்த ஆந்திர முதல்வர் ராமராவின் கனவுத் திட்டமாக ஏப்ரல் 6, 1985- ல் இந்த அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டது. 1994-இல் இது ஒரு அறக்கட்டளையாக மாற்றப்பட்டது. தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வழிகாட்டுதலின்படி, இந்தத் திட்டம் திருமலை மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள தேவஸ்தானக் கோயில்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.சுமார் 1,000 பணியாளர்கள் மற்றும் ஸ்ரீவாரி சேவகர்களின் தன்னலமற்ற உழைப்பால், திருமலை இன்று ஒரு தெய்வீக உணவுக்கூடமாகத் திகழ்கிறது.