திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம்
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது.
திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. அதிகாலை 5:00 மணிக்கு மூலவர், உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 10:00 மணிக்கு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு நமச்சிவாய கோஷம் முழங்க திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து, முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். முதலில் விநாயகர், இரண்டாவது வள்ளி தேவசேனா சமேத முருகர், நான்காவதாக அம்பாள், ஐந்தாவது சண்டிகேஸ்வரர் என நான்கு தேர்களுக்கு மத்தியில் சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் எழுந்தருளிய பெரிய தேர் அசைந்தாடி பக்தர்கள் வெள்ளத்தில் சென்றது. மாலை 4:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை செய்திருந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.