திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவம் நிறைவு
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வந்த சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் நிறைவு நாளில், உற்சவர் முருகன் விசிறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோத்சவம், கடந்த மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜை நடந்தது. உற்சவர் முருகன், காலை மற்றும் இரவு நேரத்தில் பல்வேறு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு 10:30 மணிக்கு, கொடியிறக்கத்துடன் பிரம்மோத்சவம் நிறைவடைந்தது. முன்னதாக, இரவு 9:30 மணிக்கு, உற்சவர் முருகன், வள்ளி – தெய்வானையுடன், சரவணபொய்கை குளம் அருகே உள்ள விசிறி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், மீண்டும் உற்சவர் மலைக்கோவிலுக்கு சென்றார். இரவு 10:30 மணிக்கு கொடியிறக்கப்பட்டது. நேற்று இரவு திருவூடல் நிகழ்ச்சியில் உற்சவர்கள் முருகன், வள்ளி – தெய்வானை தனித்தனியாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.