உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி: வெள்ளியங்கிரி மலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சித்ரா பவுர்ணமி: வெள்ளியங்கிரி மலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தனர்.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலை தொடரின் ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, கடந்த, பிப்., 1ம் தேதி முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதியளித்துள்ளனர். இதனையடுத்து, பக்தர்கள் மலையேறி, ஈசனை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, நேற்றுமுன்தினம் இரவு முதலே ஏராளமான பக்தர்கள் மலையேறினர். சித்ரா பவுர்ணமியான நேற்று, அடிவாரத்தில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயார், மற்றும் கிரி மலையிலுள்ள சுயம்பு வடிவிலான ஈசனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, முள்ளாங்காடு வனத்துறை சோதனை சாவடியிலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், அரசு பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மூலம் பக்தர்கள் சென்றனர். போக்குவரத்து கழகம் சார்பில், கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஏராளமான அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மருத்துவ பரிசோதனை செய்து, பிளாஸ்டிக் பொருட்கள் ஏதேனும் கொண்டு செல்கின்றனர்களா என சோதனை செய்த பின்பே, பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். 150 போலீசார் இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !