பேரூர் பட்டீஸ்வர பெருமானுக்கு 750 கிலோ மலர் வழிபாடு
தொண்டாமுத்தூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 750 கிலோ மலர் கொண்டு, பட்டீஸ்வரருக்கு மலர் வழிபாடு நடந்தது.
பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், கடந்த 31 ஆண்டுகளாக, சித்திரை மாதத்தில் உலக நலன் வேண்டி பட்டீஸ்வர பெருமானுக்கு, மலர் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், சித்ரா பவுர்ணமி தினமான இன்று உலக நலன் வேண்டி மலர் வழிபாடு நடந்தது. பேரூர் தெப்பக்குளம் அருகே உள்ள கொங்கு வேளாளர் மடத்திலிருந்து, 750 கிலோ எடையுள்ள மல்லி, முல்லை, தாமரை, சம்பங்கி, பிச்சி, அரளி, வேப்பிலை, வில்வம், செண்பகம் என, 36 வகையான மலர்கள் மற்றும் இலைகளை, சிவனடியார்கள், கயிலாய வாத்தியங்கள் முழங்க, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அதனைத்தொடர்ந்து, அர்த்தசாம பூஜையின் போது, பட்டீஸ்வர பெருமானுக்கு அந்த மலர்களைக் கொண்டு, மலர் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.