சுப்ரமணியர் தேரில் உலா
ஆர்.கே.பேட்டை : சுப்ரமணியர் கோவிலில் தை பிரம்மோற்சவத்தில், நேற்று, தேர் திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம், சுப்ரமணிய சுவாமி கோவில், தை பிரம்மோற்சவம், கடந்த 5ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் நாகம், சிம்மம், யானை, குதிரை, மயில் என, பல்வேறு வாகனங்களில் உற்சவர் எழுந்தருளினார். இதில், நேற்று, தேர் திருவிழா நடந்தது. காலை 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில் இருந்து, மேளதாளங்களுடன் தேர் புறப்பாடு நடந்தது. அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை, வங்கனுார் உள்ளிட்ட ஊர்களில் இருந்து, திரளான பக்தர்கள், இதில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 1:00 மணியளவில், திருஞானசம்பந்தர் வீதியில் தேர் நிலைக்கு வந்தது. தொடர்ந்து, புளியந்தோப்பில், 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. மாலை 5:00 மணியளவில், தேர் கோவில் வளாகத்தை அடைந்தது. நாளை (வெள்ளிக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறும். சனிக்கிழமை உற்சவரின் அன்ன வாகன வீதியுலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.