இறைவனின் ஸ்வரூபமாக பார்க்கணும்!
திருப்பூர் :""எறும்பு நடக்கும்போது கூட, "ஓம் என்கிற ஒலி எழுகிறது. எல்லாவற்றையும் கடவுளின் ஸ்வரூபமாக பார்க்க பழகிக்கொள்ள வேண்டும், என, சொற்பொழிவாளர் சென்னை வாசுதேவன் பேசினார். சத்யசாயி சேவா நிறுவனங்கள் சார்பில், சத்யசாயி சப்தாஹ தேவாமிர்த ஆன்மிக சொற்பொழிவு, திருப்பூரில் நடந்தது. சொற்பொழிவாளர் சென்னை வாசுதேவன் பேசியதாவது: மனிதர்களாகிய நாமெல்லாம் சிவசக்தி ஸ்வரூபம். ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் தன்மை உண்டு. அதேபோல், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆண் தன்மை இருக்கிறது. பகவான் ஒருவர் மட்டுமே, ஆன்ம புருஷர். கடவுளுக்கு உருவம் ஏது மில்லை. மனக்கண்ணில் இறைவனை கொண்டு வருவதற்காகவே, இந்து தத்துவம், விக்ரக வழிபாட்டை தந்துள்ளது. பகவானிடம் பொன் வேண்டும்; பொருள் வேண்டும், ஆரோக்கியம் வேண்டும் என்று பலவாறு கேட்கின்றனர்; வேண்டியனவற்றை பகவான் கொடுக்கிறார். ஆனால், தன்னை வேண்டும் என்று யார் கேட்கிறாரோ, அவர்களோடு மட்டும் பகவான் எப்போதும் இருப்பார். பகவானை நினைத்துக் கொண்டிருந்தால், மனதில் விகாரம் தோன்றாது. எல்லாவற்றிலும், பகவானை காண பழகிக் கொள்ள வேண்டும்; நம்மிடமுள்ள எல்லாமே கடவுளின் ஸ்வரூபம்தான். "ஓம் இன்றி எதுவும் இல்லை. எறும்பு நடக்கும்போது கூட "ஓம் என்ற ஒலி எழும் என்கிறார், பகவான். இஸ்லாமியர்களின் சின்னமான பிறையும் நட்சத்திரமும், இறைவன் ஒருவனே பெரியவன், எப்போதும் நான் அவனருகிலேயே இருப்பேன் என்பதை குறிக்கிறது. கிறிஸ்துவ சின்னமான சிலுவை, அகந்தையை அழிக்க வேண்டும் என்பதாக, பகவான் கூறியுள்ளார். இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், புத்தம் என எல்லா மதமும் சம்மதம் என்பதே சாய்பாபாவின் கோட்பாடு. பெங்களூருவில், புட்டபர்த்தியில் இஸ்லாமிய சகோதரர்களுக்காக பகவான், தர்கா கட்டிக்கொடுத்துள்ளார். ஒருமுறை 11 இல்லாமிய சகோதரர்கள் புட்டபர்த்திக்கு வந்தனர். அதில், ஒருவர், ஏழை; தன்னால் ஹஜ்க்கு செல்ல முடியவில்லை என்று வருந்தினார். உடனே, பாபா, அவரை, ஹஜ்க்கு அனுப்பி வைத்தார். எனவே, நேரத்தை வீணடிக்கக்கூடாது என்கிறார், பகவான். எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் பகவான், மது குடிப்போர், புகை பிடிப்பவர், சூதாடுவோர் மட்டும் என்னிடம் வரவேண்டாம் என்றார். பகவான்-பக்தன் என்கிற நிலைத்வைதம், எல்லாமே ஒன்று என்பது அத்வைதம்; பகவான் தந்தை, நான் அவரது மகன் என்பது, வசிஸ்டாத்வைதம். காலச்சக்கரம் என்பது ஓடிக்கொண்டே இருக்கும். ஓடும் தண்ணிரில் ஒருவன் இருமுறை குளிக்க முடியாது. இன்று நமக்கு கிடைத்துள்ள நாள், இதே நேரம், நாளை கிடைக்காது. காலத்தை முந்திக்கொண்டு, இறைவனுக்காக காத்திருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.