உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகராஜ சுவாமிக்கு இசை அஞ்சலி

தியாகராஜ சுவாமிக்கு இசை அஞ்சலி

திருப்பூர் : கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான, தியாகராஜ பாகவதருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திருப்பூரில் நேற்று திருவையாறுகர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர் தாம்பிரஸ், சங்கீதகலா பீடம், திருமுருகன்பூண்டி ரோட்டரி கிளப் சார்பில், "திருப்பூரில் திருவையாறு கர்நாடக இசை நிகழ்ச்சி, பார்க் ரோட்டில் உள்ள ராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனத்தில் நேற்று நடந்தது. சேலம் பிரபு குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் துவங்கிய அவ்விழாவில், தியாகராஜ பாகவதருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பஞ்சரத்ன கீர்த்தனை (கோஷ்டி கானம்) நடந்தது. தியாகராஜ சுவாமிகள் உருவ சிலைக்கு மாலை அணிவித்து, ஆராதனை செய்விக்கப்பட்டது. சேலம் மாவட்ட இசைப்பள்ளி ஆசிரியர் சங்கரராமன், ஈரோடு மாவட்ட இசைப்பள்ளி ஆசிரியர் சத்தியமூர்த்தி, பல்லடம் சாவித்ரி, சங்கீத கலா பீடம் நிறுவனர் ஸ்ரீராமன் ஆகியோர் கீர்த்தனைகள் பாடினர். திருப்பூர் வெங்கட் ரமணி வயலின், தாராபுரம் ஜீவானந்தம் தவில், பிரேம்நாத், வீராச்சாமி, சுதர்ஷன் மிருதங்கம் வாசித்தனர்; மொத்தம் ஐந்து கீர்த்தனைகள் பாடப்பட்டன. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், இளம் கலைஞர்களான தனஞ்செயன், தாரணி, சாத்வி ஆகியோர், தியாகராஜ பாகவதரின் வரலாற்றை கதாகலாட்சேபம் செய்தனர். ஆடிட்டர் ராமநாதன், திருப்பூருக்கும் திருவையாறுக்கும் இடையேயா கலைத்தொடர்பு குறித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !