உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில் மஹா சிவராத்திரி விழா பக்தர்கள் தரிசனம்!

சேலத்தில் மஹா சிவராத்திரி விழா பக்தர்கள் தரிசனம்!

சேலம்: சேலத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும், மஹா சிவராத்திரியையொட்டி, இரவு முழுவதும், பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதத்தில், தேய்பிறை சதுர்த்தியில், மகா சிவராத்திரி விழா வரும். அன்று இரவு முழுவதும் கண் விழித்து, சிறப்பு பூஜைகளை பார்த்து பக்தர்கள், இறைவனை வேண்டிக் கொள்வர். நேற்று மஹா சிவராத்தி விழாவையொட்டி, அனைத்து சிவாலயங்களிலும், விடிய, விடிய பூஜைகள் நடந்தன. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாலை, 6 மணி முதல் அதிகாலை, 4 மணி வரை பக்தர்கள் கூட்டம், ஸ்வாமியை தரிசிக்க வந்தனர். பலர், இறைவனை வேண்டி பாடல்களை பாடியபடியும், கதைகள் கூறியபடியும், கோவில் வளாகத்திலேயே அமர்ந்திருந்தனர். ஜலகண்டாபுரம் மாதேஸ்வரன் கோவிலில், சிவராத்திரியையொட்டி, வண்ண விளக்குகளால் கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறப்பு பூஜைகளும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவிலில், பெரிய புராணம் பாடல்களை பாடிய வண்ணம், சிவனடியார்களும், பக்தர்களும் இருந்தனர். இரவு முழுவதும், பக்தர்கள் தூங்காமல், சாமகால பூஜையை பார்த்து மகிழ்ந்தனர். அதேபோல், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், காவடி பழனியாண்டவர் கோவில், லீ பஜார் சொக்கநாதர் கோவில், அம்மாபேட்டை செங்குந்தர் சுப்ரமணிய சுவாமி கோவில், நெடுஞ்சாலை நகர் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளிட்டவற்றிலும், நள்ளிரவு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !