காளியம்மன் கோவில் குண்டம் விழா: 5,000 பக்தர்கள் பங்கேற்பு!
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஆண்டு தோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 18ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, 25ம் தேதி மறுகாப்பு கட்டுதலும், 26ம் தேதி கொடியேற்றமும் நடந்தது. நேற்று முன்தினம், தேர் கலசம் வைத்தல் நிகழ்ச்சி கோலாகலகமாக நடந்தது. குண்டம் திருவிழாவுக்கு முதல் நாள், காளியம்மன் ஸ்வாமிக்கு, பக்தர்கள் நேரடியாக அபிஷேகம் செய்ய அனுமதிப்பதை தொடர்ந்து, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், நீண்ட வரிசையின் நின்று, ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்தனர். நேற்று முன்தினம், காவிரி ஆற்றுக்குச் சென்ற பக்தர்கள், புனித நீராடி, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, அம்மனுக்கு, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 5,000க்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். அமைச்சர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.