தீராத பக்தியால் கடவுளை வசப்படுத்தலாம்!
திருப்பூர்: பகவானிடம் நம்பிக்கையோடு பக்தி செலுத்த வேண்டும். அன்பினால், தீராத பக்தியால் மட்டுமே கடவுளை வசப்படுத்த முடியும், என, சொற்பொழிவாளர் முரளீதர சுவாமிகள் பேசினார். ஸ்ரீமத் பாகவதம் சொற்பொழிவு, திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியில் நடந்து வருகிறது. சொற்பொழிவாளர் முரளீதர சுவாமிகள் பேசியதாவது: பகவானிடம் நம்பிக்கையோடு பக்தி செலுத்த வேண்டும். ஒரு பறவை முட்டையிட்டு விட்டு, வெளியே சென்று விட்டது. அச்சமயத்தில், முட்டையில் இருந்து வெளி வரும் குஞ்சு, யார் இங்கு கொண்டு வந்தது, எதற்காக வந்தோம் என தெரியாமல் இருக்கும். அதுபோல், சரியான பக்தி கொள்ளாதவர்களே உலகில் உள்ளனர். அன்பினால், தீராத பக்தியால் மட்டுமே கடவுளை வசப்படுத்த முடியும்.கம்பீரம் உள்ள யானை, சிறியபாகனுக்கு கட்டுப்படுவது போல், பக்தியால் பகவான் நம் பின்னால் வருவார். தெய்வத்தின் கதைகளை கேட்பதை விட, ராமகிருஷ்ணர், மீரா, ரமணர் ஆகியோரது கதைகளை கேட்க வேண்டும்; அதுவே, கடவுளை அடைய சிறந்த வழி. தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரைகக்கு அர்த்தம் உண்டு. கட்டை விரல் முக்கியமானது; அது, கடவுள்; ஆட்காட்டி விரல் ஜீவன்; நடுவிரல் ஆணவம்; மோதிர விரல் பொருள்; சுண்டு விரல் காமம். இவற்றை அடக்கினால், கடவுளை அடையலாம்.
பகவான் கோவிலுக்கு வருபவர்களை தடுத்து நிறுத்தினால், சாபம் கிடைக்கும். யார் செய்தது குற்றம் என பகவான் பார்க்க மாட்டார்; அதற்கும் காரணம் நானே என்பார். நல்லதை மட்டும் பகவான் பார்ப்பார்; பக்தி இருக்கிறதா அது போதும். கேட்ட வரத்தை கடவுள் கொடுக்க வில்லை என வருத்தப்படக் கூடாது; ஒரு தாய்க்கு தெரியும், தனது குழந்தைக்கு எது கொடுக்க வேண்டும்; எது கொடுக்கக்கூடாதது என்று. பகவானிடம் சர்வ பிரச்னை களையும் ஒப்படைத்து விட்டால் போதும்; வயது இருக்கும் போதே பக்தி செலுத்த வேண்டும். ஓடி, உழைத்து பொருள் சேர்த்து விட்டு, வயதான காலத்தில் தியானம் செய்ய முடியாது. வயது இருக்கும் போதே பக்தி செலுத்த வேண்டும். பகவானை அடைய அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்; அவற்றுக்கு உணவு கொடுக்க வேண்டும்.நம்பிக்கை இல்லாமல் செய்யும் எந்த காரியமும் வெற்றி பெறாது; அதுபோல், கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல், நாள் முழுவதும் பூஜை, புனஸ்காரம் செய்தாலும் பயனில்லை.பிரகலாதன் கடவுள் மீது நம்பிக்கை வைத்து, இந்த தூணில் இருக்கிறார் என்றான். நரசிம்ம அவதாரமாக , ஆக்ரோஷமாக வந்து இரணியனை வதம் செய்தார். இவ்வாறு, அவர் பேசினார்.