உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓமலூர் பகுதி கோவிலில் தீ மிதி விழா கோலாகலம்

ஓமலூர் பகுதி கோவிலில் தீ மிதி விழா கோலாகலம்

ஓமலூர்: ஓமலூர் சுற்றுவட்டார கிராமங்களில், மாரியம்மன், காளியம்மன் கோவில்களில், மாசித் திருவிழா, கோலாகலமாக நடந்தது. ஓமலூரில், 18 கிராமங்களுக்கு உட்பட்ட கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா, பூச்சாட்டுதலுடன் துவங்கி, கரகம் எடுத்தல், பொங்கல் வைபவம், அலகு குத்துதல், வண்டி வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், ஓமலூர் சுற்றுவட்டார கிராம மக்கள், குடும்பத்துடன் கலந்துகொண்டு, அம்மனை வழிபட்டுச் சென்றனர்.

* கருப்பூர், பொன்பரப்பி பத்திரகாளியம்மன் கோவில் மாசித்திருவிழாவில், அம்மனுக்கு வெள்ளி கவசம் சாத்தி, சிறப்பு பூஜை செய்தனர். பின்னர், பூங்கரகம், அக்னி கரகம், அரவான் பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. மாலையில், தீ மிதி திருவிழா நடந்தது. இதில், ஆண்கள், பெண்கள் என ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தீக்குண்டத்தில் இறங்கி, தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

* பச்சனம்பட்டி மாரியம்மன் கோவிலில், சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், தீ மிதி விழா நிகழ்ச்சியும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குண்டம் இறங்கினர். இரவில், கிராமிய கலை நிகழ்ச்சியும், இசை நிகழ்ச்சியும், வண்டி வேடிக்கையும் நடந்தது. ஓமலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கோவில் திருவிழாவையொட்டி, ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் தலைமையிலான போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !