நெற்குன்றத்தில் விநாயகர் சிலை : அறிக்கை அளிக்க உத்தரவு!
சென்னை: நெற்குன்றத்தில், காலி இடத்தை ஆக்கிரமித்து, விநாயகர் சிலை வைத்திருப்பதாக கூறும் புகார் குறித்து, ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும்படி, மாநகராட்சிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கொரட்டூரை சேர்ந்த, ஜீவிதா என்பவர், தாக்கல் செய்த மனு: நெற்குன்றம், ஜானகிராம் காலனியில், எனக்கு சொந்தமாக, 2,015 சதுரடியில், காலி இடம் உள்ளது. இதற்கு, பட்டாவும் உள்ளது. காலியாக உள்ள இந்த இடத்தில், விநாயகர் சிலையை, சிலர் வைத்துள்ளனர். அதன் மேல், கூரையும் அமைக்கப்பட்டுள்ளது. அதை அகற்றாவிட்டால், நிரந்தரமாக அங்கு கட்டுமானம் செய்து வி டுவர். இதுகுறித்த, மாநகராட்சிக்கு, மனுக்கள் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் இல்லை. இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த, தற்காலிக தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதி சுந்தரேஷ் அடங்கிய, "முதல் பெஞ்ச், இடத்தை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை, அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.