உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: பறவைக்காவடி எடுத்து வழிபாடு!

மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா: பறவைக்காவடி எடுத்து வழிபாடு!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து அம்மனை வழிபட்டனர். பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி நோன்பு சாடடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கடந்த 25ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது. பெண்கள் தினசரி கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபாடு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, விரதமிருந்த பக்தர்கள், கடந்த 7ம் தேதி முதல் பூவோடு எடுத்து, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இரண்டாம் நாளான நேற்றுமுன்தினம் பத்தரகாளியம்மன் கோவில், வீதி, ஜோதிநகர், சீனிவாசபுரம், கண்ணப்பன்நகர், குமரன் நகர் மற்றும் மார்க்கெட் ரோடு பகுதி பக்தர்கள் பூவோடு எடுத்தனர். இதில், பக்தர்கள் நான்கு அடி நீளமுள்ள பறவைக்காவடி ஏந்தியும், அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியபடி, பறவைக்காவடி எடுத்து, ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இந்த நிகழ்ச்சியையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !