கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் விழா: 3,460 பக்தர்கள் பயணம்!
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு தமிழகம், கர்நாடகா, கேரளாவை சேர்ந்த 3460 பக்தர்கள் செல்ல உள்ளனர். சர்ச் திருவிழா, மார்ச் 15ம் தேதி நடக்கிறது. இலங்கை நெடுந்தீவு பாதிரியார் அமல்ராஜ் கொடி ஏற்றி துவக்கி வைக்கிறார். அன்றிரவு, சிலுவை வழிபாடு, தேர் பவனி, மார்ச் 16 காலை 8 மணிக்கு, சிறப்பு திருப்பலி, தேர்பவனிக்கு பின்னர், கொடி இறக்கத்துடன் விழா முடிகிறது. இதில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து 488 பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 3460 பேர், மார்ச் 15ம் தேதி படகுகளில் கச்சத்தீவு செல்கின்றனர். ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ்: பக்தர்களின் முதல் படகு, மார்ச் 15, காலை 5.30 மணிக்கு, ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும். கர்நாடகா, கேரளாவை சேர்ந்த 60 பக்தர்கள், 120 பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் செல்கின்றனர். தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள், போதை வஸ்துகளை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12, 13ல், பக்தர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும், இலங்கை தூதரக அதிகாரியிடம் அனுமதி பெற்ற நிருபர்கள், போட்டோகிராபர்கள் மட்டும், விழாவில் பங்கேற்கலாம். மற்றபடி அனைவரும் பக்தர்களாக வரலாம், என்றார். இலங்கை தூதரக அனுமதி பெறாமல், பக்தர்கள் போர்வையில் நிருபர்கள், போட்டோகிராபர்கள் வந்தால், தடுத்து நிறுத்தப்படுவர் என மத்திய, மாநில உளவு போலீசார் தெரிவித்தனர்.