திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
புதுக்கோட்டை: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பக்திபரவசத்துடன் கோலாகலமாக நடந்தது. கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு நின்று தேர் வடம் தொட்டு இழுத்தனர். புதுக்கோட்டை அடுத்த திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா கடந்த 2ம் தேதி ஆரம்பமாகியது. 17ம் தேதி முடிய விழா தொடர்ந்து, 16 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று(10ம் தேதி) தேர் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. நேர்த்திகடன் நிறைவு செய்வதற்காக மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகுகள் குத்தியும், பறவை காவடி, வேல் காவடி, புஷ்ப காவடி என விதவிதமான காவடிகள் எடுத்தும் பவனி வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதையடுத்து உச்சபூஜைக்காக அம்மனுக்கு சந்தணக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மாலை, 3 மணிக்கு தேரோட்டத்துக்கான சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையடுத்த முத்துமாரியம்மன் உல்ஸவமூர்த்திக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு சர்வ அலங்காரம் நடந்தது. மாலை, 4 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.
மேளதாளமும், பெண்களின் மங்கல குரவையும் ஓங்கி ஒலிக்க மாவட்ட கலெக்டர் மனோகரன் தேரோட்டத்தை வடம் தொட்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து "அம்மா தாயே முத்துமாரி என்ற சரண கோஷத்தை உச்சரித்தவாறு பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்கள் கூட்டத்தின் நடவே ஆடி அசைந்தவாறு வலம் வந்த தேர் சரியாக, 5.40 மணிக்கு கோவிலின் முன்பு நிலைக்கு வந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சர்வ அலங்காரத்துடன் முத்துமாரியம்மன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேர் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. திருவப்பூர், திருக்கோகர்ணம், மாலையீடு, மச்சுவாடி, மேட்டுப்பட்டி, காமராஜபுரம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பந்தல்கள் அமைக்கப்பட்டு காலையில் மோர், சர்பத், பானகம் வழங்கப்பட்டது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு விடிய, விடிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக கோவிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் டேங்கர் லாரிகள் மூலம் கோவிலைச் சுற்றி அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்பட்டது. தேர் திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்கள், விழா கமிட்டியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.