உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கி.கிரியில் நான்கடி ஆழத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு!

கி.கிரியில் நான்கடி ஆழத்தில் அம்மன் சிலை கண்டெடுப்பு!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை கூட்ரோடு அருகே பொன்காளியம்மன் கோவிலூர் கிராமத்தில், ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றம் உள்ளது. இங்கு, கடந்த வாரம் நடந்த சிறப்பு பூஜையின் போது, ஒரு பக்தருக்கு அருள் வந்தது. அப்போது அவர், "நான், அம்மன் உருவத்தில் சிலையாக, இங்குள்ள வேப்பமரத்து அடியில் உள்ளேன். அதனை எடுத்து, வழிபாட்டு மன்றத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால், கிராம மக்கள் நோயின்றி, நல்ல செழிப்புடன் வாழ்வர், என்றார். இதுகுறித்து, வி.ஏ.ஓ., குட்டதிரவர்த்தன், தாசில்தார் வள்ளிக்கு தகவல் கொடுத்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில், வேப்பமரத்தின் அருகில் நான்கரை அடி ஆழம் குடி தோண்டப்பட்டது. அப்போது, ஒன்றரை அடி உயரம் கொண்ட வெண்கலத்தினால் ஆன அம்மன் சிலை இருந்தது, தெரியவந்தது. இதனை எடுத்த, ஓம்சக்தி வார வழிபாட்டு மன்றத்தில் வைத்து, கிராம மக்கள் வழிபட்டனர். பூமியில் இருந்து எடுக்கப்பட்ட சிலைகளை, அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது சட்டம். இதுகுறித்து, தாசில்தார் வள்ளிக்கு, வி.ஏ.ஓ., குட்டதிரவர்த்தனன் தகவல் தெரிவித்தார். ஆனால், தேர்தல் பணியை காரணம் காட்டி, அப்பகுதிக்கு வராத தாசில்தார், துணை தாசில்தார் விமலனை, சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தார். ஆனால், சிலையை ஒப்படைக்க பொதுமக்கள் மறுத்தனர். இதனையடுத்து, துணை தாசில்தார் விமலன், காவேரிப்பட்டணம் போலீஸில் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் ஜாபர்உசேன், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !