உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?

பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?

பிரதோஷம் என்றால் குற்றமில்லாதது என்று பொருள். எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்றும் ஆன்றோர்கள் கூறுவர். இரவும் பகலும் சந்திக்கும் நேரத்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வேளையின் அதிதேவதை சூரியனின் மனைவி உஷாதேவி. அதேபோல் பகலும் இரவும் சந்திக்கும் நேரம் பிரத்யுஷத் காலம் இதன் அதிதேவதை, சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் இது பிரத்யுஷத் காலம் எனப்பட்டு, பேச்சுவழக்கில் பிரதோஷ காலம் ஆனதாகச் சொல்வர்.

பிரதோஷ விரதம்: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.

பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?

பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்திக்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும். வலம் வருதல் : சாதாரண நாளில் சிவ சந்நிதியை மூன்று முறை வலம்வர வேண்டும். ஆனால் பிரதோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும் சோமசூத்தகப் பிரதட்சிணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு அப்பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வணங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவலிங்கத்தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல்  அப்பிரதட்சணமாக ஆலயத்தை வலம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபிஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்னதிக்கு வந்து சிவலிங்கத்தையும், நந்தியையும்  வணங்க வேண்டும். இப்படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவமேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறியுள்ளனர். அந்தந்த திசாபுத்திகள் நடைபெறுபவர்கள் அந்தந்த கிழமைகளில் வரும் பிரதோஷத்தன்று இறைவனை இவ்வாறு வலம் வருவதால் இன்னல்கள் நீங்கி நன்மைகள் பெறுவர்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை: வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்க வேண்டும். திருமுறைகளை ஓத வேண்டும். பிரதோஷநேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தல் அவசியமாகும்.

பிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்:

1. துன்பம் நீங்கி - இன்பம் எய்துவர்.
2. மலடு நீங்கி - மகப்பேறு பெறுவர்
3. கடன் நீங்கி - தனம் பெறுவர்
4. வறுமை ஒழிந்து - செல்வம் சேர்ப்பர்
5. நோய் நீங்கி - நலம் பெறுவர்.
6. அறியாமை நீங்கி - ஞானம் பெறுவர்
7. பாவம் தொலைந்து - புண்ணியம் எய்துவர்
8. பிறவி ஒழித்து - முக்தி அடைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !