சிவகாசி மாரியம்மன் கோயிலில் நாளை பங்குனி விழா கொடியேற்றம்!
சிவகாசி : சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா, நாளை (மார்ச் 30) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.சிவகாசி இந்து நாடார் உறவின்முறைக்கு சொந்தமான மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா, நாளை இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், கொடியேற்ற நாளில் காப்பு கட்டி விரதம் இருப்பார்கள். தினமும் சிங்கம், காமதேனு, கைலாசபர்வத வாகனம், வேதாள வாகனம், சிம்ம, வெள்ளி ரிஷிப வாகனம், பூ பல்லாக்கு, யானை வாகனம், குதிரைவாகனம் ஆகிய வாகனங்களில், சுவாமி அலங்கரிக்கப்பட்டு, வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 9ம் விழாவில் (ஏப்.,7ம்) பக்தர்கள் அக்னி சட்டி, கயிறு குத்து, மாவிளக்கு, காவடி எடுத்தல், முடிகாணிக்கை, தவழும் பிள்ளை நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 8ம்தேதி அம்மன் அலங்கார தேரில் எழுந்தருள, பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறுகிறது. தேரானது,நான்கு ரதவீதிகளில் உலா வருகிறதும். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். தேர் நிலைக்கு வந்தவுடன், கடைசி விழாவாக வெள்ளி ரிஷிப வாகனத்தில், பத்திரகாளியம்மன், மாரியம்மன் வலம் வருவர். விழா ஏற்பாடுகளை, இந்து நாடார் உறவின்முறை மகமை பண்டுநிர்வாகிகள் செய்கின்றனர்.