ஸ்ரீமலையில் யுகாதி பண்டிகை: இரு மாநில சிறப்பு பஸ் இயக்கம்!
மேட்டூர்: மாதேஸ்வரன் ஸ்வாமி கோவில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு, மேட்டூரில் இருந்து, ஸ்ரீமலைக்கு தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆண்டுதோறும் பங்குனி அமாவாசையை முன்னிட்டு, கர்நாடகா மாநிலம், ஸ்ரீமலை, மாதேஸ்வரன் ஸ்வாமி கோவிலில் யுகாதி பண்டிகை சிறப்பாக நடக்கும். இதில், தமிழகத்தின் சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்பார்கள். நாளை, (மார்ச், 30) பங்குனி அமாவாசையை முன்னிட்டு, மாதேஸ்வரன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, தர்மபுரி, ஈரோடு, சேலத்தில் இருந்து ஸ்ரீமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேட்டூரில் இருந்து, ஸ்ரீமலைக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 50 சிறப்பு பஸ்களும், கர்நாடகா அரசு போக்குவரத்து கழகம் சார்பில், 50 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. வரும், 3ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.