மழை வேண்டி கிணற்றுக்குள்ளிருந்து லிங்கத்தை எடுத்து.. சிறப்பு வழிபாடு!
ADDED :4232 days ago
நத்தம் : நத்தம் அருகே சமுத்திராப்பட்டி கிராமமக்கள், மழைவேண்டி ஊரணி கிணற்றுக்குள்ளிருந்து லிங்கத்தை எடுத்து சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டனர். சமுத்திராப்பட்டி மற்றும் இதன் சுற்றுப்புற கிராமங்களில் மழையில்லாததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கால் நடைகள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி உள்ளது. சமுத்திராப்பட்டி கிராமப்பகுதிகளில் பல ஆண்டுக்கு முன்னர் மழையில்லாமல் போனது. அப்போது ஊரணியில் நீரின்றி நடுக்கிணற்றுக்குள், பல நூறாண்டுக்கு முன் இக்கிராம மக்களின் முன்னோர்களால் வைத்து வணங்கப்பட்ட லிங்கத்தை எடுத்து ஊரணிக்கரையில் வைத்து வழிபட்டுள்ளனர். அது போல நேற்று சமுத்திராப்பட்டி கிராமமக்கள் விரதமிருந்து, ஊரணிக்கிணறிலிருந்த லிங்கத்தை எடுத்து கரை மேல் வைத்து ஐந்து வகை அபிஷேகம், அர்ச்சனை செய்துவழிபட்டனர்.