பழமை வாய்ந்த கோவில் புதுப்பிக்கும் பணி துவக்கம்!
உடுமலை : உடுமலை அருகே பெதப்பம்பட்டியில், பழமை வாய்ந்த கோவிலை புதுப்பிக்க பூமி பூஜை நேற்று நடந்தது. உடுமலை பெதப்பம்பட்டியில், பழமை வாய்ந்த தண்டபாணி, பகவதியம்மன் கோவில் உள்ளது. செஞ்சேரிமலை ரோட்டிலுள்ள இந்த கோவில், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல், முட்புதர்கள் மண்டிக்கிடந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பே கோவில் கட்டடங்கள் பழுதடைந்து, சாமி சிலைகள் மட்டுமே மிஞ்சின. இச்சிலைகளை பராமரித்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில், கோவில் அமைந்திருந்த நிலத்தை ஆக்கிரமிக்க சிலர் முயற்சித்தனர். இது குறித்து கோவில் அறக்கட்டளையினர் சார்பில், திருப்பூர் நில அபகரிப்பு தடுப்பு போலீசில் புகார் செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பு முயற்சி தடுக்கப்பட்டது. இதனையடுத்து, சிதிலமடைந்த கோவிலை புனரமைக்க அப்பகுதி மக்கள் முன்வந்தனர். இதனையடுத்து, கோவில் திருப்பணி குழு அமைக்கப்பட்டு, தண்டபாணி, கிருஷ்ணமூர்த்தி (பஜனை கோவில்), பகவதியம்மன், ரேணுகாதேவி ஆகிய சன்னதிகள் கட்ட தீர்மானிக்கப்பட்டது. கோவில் கட்டுமான பணிகளை துவக்கும் வகையில், நேற்று காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, திருமூர்த்திமலையிருந்து பக்தர்கள் எடுத்து வந்த தீர்த்தம் செலுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பழமையான கோவில், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட உள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.