உடுமலை தேர்த்திருவிழா இன்று நிறைவு
உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, இன்று நிறைவடைகிறது. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 1ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. 8 ம்தேதி திருவிழா கம்பம் போடப்பட்டது. 11ம் தேதி கொடியேற்றம் நடந்தது.நோன்பு சாட்டுதலை தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. கம்பத்துக்கு பக்தர்கள் தீர்த்தம் ஊற்றி வழிபட்டனர். பக்தர்கள் பூவோடு எடுத்து நேர்த்திக் கடன் செய்தனர். கடந்த 11ம் தேதி முதல் தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்தார். 16ம் தேதி, சூலத்தேவருக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடந்தது. கோவில் வளாகத்திலும், குட்டைத்திடலிலும், ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை, மெல்லிசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. குட்டைத்திடலில், நேற்றிரவு பரிவேட்டை மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று, காலை 9.30 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது. காலை 11.30 மணிக்கு, அம்மனுக்கு மகா அபிேஷகம் செய்யப்படுகிறது.