உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி ருக்மணி, சத்யபாமா, கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணி ருக்மணி, சத்யபாமா, கிருஷ்ணர் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணி: ருக்மணி, சத்யபாமா உடனுறை கிருஷ்ண பரமாத்மா கோவில் கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி ஒன்றியம், டி.சி.கண்டிகை ஊராட்சிக்குட்பட்ட, என்.எஸ்புரம் கிராமத்தில், ருக்மணி, சத்யபாமா உடனுறை கிருஷ்ண பரமாத்மா கோவில் உள்ளது. 100 ஆண்டுகள், பழமை வாய்ந்த இக்கோவிலை, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டன. கலசங்கள் தொடர்ந்து கோவிலின் கும்பாபிஷேகம், கடந்த 22ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில் மூன்று யாகசாலை, 108 கலசங்கள் வைத்து, முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம், சுப்ரபாதம், வேதபாராயணம், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், பரிவார தேவதை பூஜை உட்பட, நான்கு கால யாகபூஜைகள் நடந்தன. நேற்று காலை, 8:00 மணிக்கு, பிராண பிரதிஷ்டை, பிரதான ஹோமம் நடந்தது. காலை 9:30 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, பிரதிஷ்டை செய்ய, சிலையின் மீது கலசநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

திருவீதி உலா :
தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு, கிருஷ்ணருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், இரவு 9:00 மணிக்கு, ருக்மணி, சத்தியபாமா உடனுறை கிருஷ்ணர் திருவுருவப் படம் சிறப்பு அலங்காரத்துடன், திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10:00 மணிக்கு, திருப்பதி தேவஸ்தான உறுப்பினர், மணிராஜுவின் பக்தி பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !